×

திருப்பத்தூர் பெண்ணுக்கு தாசில்தார் வழங்கினார் 10 ஆண்டுகளாக தொடர்ந்து போராடி ‘சாதி, மதம் அற்றவர்’ சான்று பெற்றேன்: வக்கீல் சினேகா பேட்டி

திருப்பத்தூர்: திருப்பத்தூரில் சாதி, மதம் அற்றவர் என்ற சான்றிதழை பெண் வக்கீலுக்கு தாசில்தார் வழங்கினார். 10 ஆண்டுகளாக தொடர்ந்து போராடி இந்த சான்றிதழை பெற்றுள்ளேன் என்று அவர் பெருமிதத்துடன் பேட்டி அளித்தார். வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் இரட்டைமலை சீனிவாசன் பேட்டை பகுதியை சேர்ந்த ஆனந்தகிருஷ்ணன்- மணிமொழி தம்பதியரின் மகள் சினேகா. வழக்கறிஞரான இவர் சாதி, மதம் அற்றவர் என்ற சான்றிதழை பெற்றுள்ளார். இதுகுறித்து வக்கீல் சினேகா கூறியதாவது: முதல் வகுப்பு சேர்க்கையில் தான் பள்ளி நிர்வாகம் என்ன சாதி என்று கேட்டது. எனக்கு சாதி இல்லை என்று பெற்றோர் சொல்ல, மதத்தையாவது சொல்லுங்கள் என்றனர். மதமும் இல்லை என்றனர் பெற்றோர். பின்னர், பள்ளி முதல் கல்லூரி வரை எந்த ஆவணத்திலும் சாதி, மதம் குறிப்பிட்டதில்லை.

சாதி சான்றிதழும் இல்லை.  எனக்கு 20 வயதில் கி.பார்த்திபராஜா உடன் என் இணை ஏற்பு விழா சாதி, மத சடங்குகள் அற்ற தாலி போன்ற சாதிய அடையாளங்கள் அற்ற புரட்சிகர விழாவாக நடத்தினோம். பின்னர், எங்கள் 3 மகள்களை சாதி மத அடையாளங்கள் இன்றி வளர்த்து வருகிறோம். சாதி சான்றிதழை கேட்கும் அனைத்து அமைப்பிற்கும் நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். சாதிய அமைப்பிற்கு அடையாளமாக இருக்கும் சாதி சான்றிதழ் போல், சாதி, மதம் அற்றவர் என எங்கள் வாழ்விற்கு அடையாளமாக ஒரு சான்று வேண்டும் என முடிவு செய்து 10 ஆண்டுகளாக கலெக்டர், சப்-கலெக்டர் என்று மனுக்களை கொடுத்து முயன்றும் முடியவில்ைல. இந்நிலையில், தாசில்தார் சத்தியமூர்த்தியின் நீண்ட முயற்சியால் எனக்கு எந்த சாதியும் மதமும் இல்லை என்ற சான்றிதழ் தற்போது கிடைத்துள்ளது. தொடர்ந்து போராடி  வெற்றி பெற்றுள்ளேன். மேலும், சாதி மதம் அற்றவரென அரசு சான்றிதழ் பெற்ற முதல் இந்தியர் என்பதில் நான் பெருமை கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

கமல்ஹாசன் பாராட்டு
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் டிவிட்டரில் கூறியிருப்பதாவது: தமிழ் மகள் சினேகாவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். மதம் மாறுவதை விட மனம் மாறுவதே சிறப்பு. வா மகளே வா, புது யுகம் படைப்போம். சாதியற்ற உலகம் சாத்தியமில்லை என இனியும் அடம் பிடிப்போர்க்கும் இடம் ஒதுக்கீடு செய்வோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சான்றிதழ் கொடுக்கலாமா? கலெக்டர் விசாரணை
வேலூர் கலெக்டர் ராமன் இதுகுறித்து அளித்த பேட்டியில் ‘இந்த சான்றிதழ் பெற்றதால் அவருக்கு எந்த நன்மையும் இல்லை. தீமையும் இல்லை. சட்டத்தில் இதுபோன்று சான்றிதழ் கொடுக்க இடம் இருக்கிறதா? இல்லையா? என்று விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tashildar ,Thilasdar ,Sneha ,fight , Tirupattur girl, Tasildar, caste, unbeliever, lawyer Sneha
× RELATED இடப்பிரச்னையில் பெண்ணை தாக்கியவர் கைது