×

ஏழை விவசாயிகளுக்கு பாஜ தருவதாக கூறிய ரூ.17ஐ விட அதிகமாக நிதியுதவி வழங்குவோம்: ராகுல் புதிய வாக்குறுதி

வல்சாத்: ‘‘மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், பாஜ வழங்குவதாக அறிவித்துள்ள ரூ.17 நிதியுதவியை விட கூடுதல் தொகையை ஏழை  விவசாயிகளுக்கு வழங்குவோம்’’ என்று ராகுல் காந்தி உறுதியளித்தார். குஜராத் மாநிலம்,  வல்சாத் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில், கட்சியின் தேசிய தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு  பேசியதாவது: விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய மறுக்கும் மோடி அரசு, 15 தொழில் அதிபர்களின் ரூ.3.5 லட்சம் கோடி வங்கி கடனை தள்ளுபடி செய்துள்ளது. மத்திய  அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு தினமும் ரூ.17 நிதியுதவி வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். நாங்கள் ஆட்சிக்கு  வந்தால் இந்த தொகையை விட அதிகமான நிதியை குறைந்தபட்ச வருமான உத்தரவாத திட்டத்தின் கீழ் ஏழைகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்துவோம்.

 ரபேல் விமான ஒப்பந்த ஊழலில் பாதுகாவலரே திருடனாக மாறிய விவகாரம் பிரான்சில் பிரபலம் அடைந்துள்ளது.  அந்த நாட்டின் முன்னாள் அதிபரும் கூட,  ‘பாதுகாவலரே திருடனாக மாறி விட்டார்’ என குற்றம்சாட்டியுள்ளார். பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்துடன் ரபேல் ஒப்பந்தம்  தொடர்பாக போட்டி ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தியதாக பாதுகாப்பு அமைச்சகமும், விமானப்படையும் தெரிவித்துள்ளன.இவ்வாறு ராகுல் பேசினார்.

பழங்குடியினரை விரட்டுவதே நோக்கம்:
மத் திய அரசு கொண்டு வந்துள்ள வனபாதுகாப்பு உரிமை சட்டத்தை கைவிட வேண்டும் என்று அரசியல் கட்சிகளும்,  ஆதிவாசிகளும் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளன. இந்நிலையில், மத்திய அரசை குற்றம்சாட்டி ராகுல் தனது டிவிட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்டுள்ள பதிவில், ‘வன உரிமை சட்டத்திற்கு எதிராக உச்ச  நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில் பாஜ அமைதியான பார்வையாளராக செயல்படுகிறது. வனத்தில் வசித்து வரும் லட்சக்கணக்கான பழங்குடியின மக்கள்,  ஏழை விவசாயிகளை அங்கிருந்து விரட்டுவதே ஆளும் கட்சியின் நோக்கமாக உள்ளது’ என கூறியுள்ளார்.

கட்டிப்பிடி வைத்தியம் ஏன்?:
மக்களவையில் மோடியை கட்டிப்பிடித்தது ஏன் என்பது குறித்து கூட்டத்தில் ராகுல் பேசுகையில், ‘‘வெறுப்பு என்பது அச்சுறுத்தலின் மறு உருவம். இதன்  மூலம்தான் வெறுப்பு உருவாகிறது. எங்களிடம் வெறுப்பு இல்லை, அதனால் அச்சமும் இல்லை. ஆனால், பாஜ வெறுப்பை மட்டுமே உமிழ்கிறது. அதனால்,  மக்களவையில் அவருக்கு வெறுப்புக்கு பதிலாக கட்டி அணைத்து அன்பை வெளிப்படுத்தினேன். அன்பால்தான் வெறுப்பை வீழ்த்த முடியும். அவரை கட்டி  அணைத்தபோது அவரிடம் எனக்கு எந்த வெறுப்பும் இல்லை. ஆனால், அவரிடம் வெறுப்பு இருந்தது. அதை அவரால் கையாள முடியவில்லை’’ என்றார்.

ராகுலுக்கு முத்தம் கொடுத்த பெண்:
பொதுக்கூட்டம் தொடங்கும் முன்பாக காங்கிரசை சேர்ந்த 2 பெண் தொண்டர்கள்  ராகுலுக்கு  மாலை அணிவிக்க மேடைக்கு வந்தனர். அப்போது, அந்த பெண்  தொண்டர்களில் ஒருவர், திடீரென ராகுலின் கன்னத்தில் முத்தமிட்டார். இதனால், அங்கே ஆரவாரமும் பரபரப்பும் ஏற்பட்டது. ‘ராகுலுக்கு காதலர் தின முத்தம்  கொடுத்தீர்களா?’ என அந்த பெண்ணிடம்  செய்தியாளர்கள் கேட்டதற்கு, “நான் காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர். சூரத்தை சேர்ந்த நான் 48 ஆண்டுகளாக  கட்சியில் இருக்கிறேன். நான் ராகுலின் நலத்தில் அக்கறை கொண்டவள். ராகுல் எனது சகோதரரை போன்றவர். அவரை இங்கே பார்த்ததும் உணர்ச்சிவசப்பட்டு  விட்டேன். ராகுல் நிச்சயம் பிரதமர் ஆவார்” என்றார். ராகுலுக்கு முத்தமிட்ட அந்த பெண் தொண்டரின் பெயர் காஷ்மீரா பென். அவருக்கு வயது 60.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rahul , Poor farmers, BJP, sponsor, Rahul, promise
× RELATED அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்