×

ராமநாதபுரம் அருகே இளம்பெண்ணை தாயாக்கிய வாலிபர் திருமணத்திற்கு மறுப்பு: ஆளுங்கட்சி பிரமுகர் தலையீட்டால் நடவடிக்கை எடுக்க போலீசார் தயக்கம்?

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி, தனது மகளை  தாயாக்கிய வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண் ஒருவர் புகார் செய்துள்ளார். மேலும் ஆளுங்கட்சி பிரமுகர் ஒருவர் தலையீட்டால், போலீசார் விசாரிக்க மறுப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் சந்திரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது மகள் கலா(21, பெயர் மாற்றப்பட்டுள்ளது), ராமநாதபுரத்தில் ஒரு கடையில் ேவலை செய்து வந்தார். அப்போது சாலைதோட்டம் கிராமத்தை சேர்ந்த சரத்(19) என்பவருக்கும், அவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் காதலித்து வந்துள்ளனர். பல்வேறு இடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்துள்ளனர். இதில் கலா கர்ப்பம் அடைந்தார்.

முதலில், திருமணம் செய்து கொள்வோம் என்று கூறி வந்த சரத், கர்ப்பிணியானதும்  கலாவை திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டார். மேலும், சரத்தின் உறவினர்கள் கலா மற்றும் அவரது தாய் சந்திராவை மிரட்டியதாக தெரிகிறது. இது தொடர்பாக கடந்த 6 மாதத்திற்கு முன், கீழக்கரை மகளிர் காவல் நிலையத்தில் சந்திரா புகார் செய்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார், வழக்குப்பதிவு செய்யாமல், மனு ரசீதும் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், நிறை மாத கர்ப்பிணியான கலாவுக்கு நேற்றிரவு பிரசவ வலி எடுத்தது. தொடர்ந்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இன்று காலை அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

கலாவின் தாய் சந்திரா கூறுகையில், ‘‘கணவர் இறந்து விட்ட நிலையில், வறுமையின் காரணமாக எனது மகள் கடைக்கு வேலைக்கு சென்றார். திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சரத் எனது மகளை கர்ப்பமாக்கியுள்ளார். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தும் பயனில்லை. ஆளும் கட்சி பிரமுகரின்  தலையீட்டால் சரத் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் தயக்கம் காட்டுகின்றனர். மன உளைச்சல் அதிகமாகியுள்ளதால் நாங்கள் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை’’ என்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : governor ,Ramanathapuram ,intervention , Ramanathapuram, younger woman
× RELATED நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற...