×

முடிவுக்கு வந்தது ரோவர் சகாப்தம் !! : 15 ஆண்டுகளாக செவ்வாய் கிரகத்தில் ஆய்வு செய்த ரோவர் விண்கலம் முற்றிலும் செயலிழந்தது

வாஷிங்க்டன் : விண்வெளியில் சகாப்தம் கண்டுள்ள ஆபர்ச்சுனிட்டி ரோவர் விண்கலம் தற்போது முற்றிலுமாக  செயலிழந்துவிட்டதாக நாசா விஞ்ஞானிகள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

ஆபர்ச்சுனிட்டி ரோவர் விண்கலம்


செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்வதற்கான சூழ்நிலைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா சார்பில் கடந்த 2003-ம் ஆண்டு ஜூன் மாதம் ஆபர்ச்சுனிட்டி என்ற ரோவரை டெல்டா 2 ராக்கெட் மூலம் நாசா அனுப்பியது. 2004ம் ஆண்டு ஜனவரி மாதம் செவ்வாய் கிரகத்தில் இறங்கிய ரோவர் 3 வாரம் கழித்து தனது பணிகளை தொடங்கியது. இதன் ஆயுட் காலம் 90 நாட்கள் என கணிக்கப்பட்ட நிலையில், செவ்வாய் கிரகத்தைச் சுற்றி 45கிமீ தொலைவிற்கு ஆய்வு செய்து பல அரியவகை புகைப்படங்களை அனுப்பி விஞ்ஞானிகளை ஆராய்ச்சிகளுக்கு உதவியது. இந்த ரோவர், லேசர் மூலம் செவ்வாய் கிரகத்தில் உள்ள பாறைகளை துளையிட்டு மாதிரிகளை சேகரித்து வந்தது. அத்துடன் தொடர்ந்து 15 ஆண்டுகளாக ஆபர்ச்சுனிட்டி ரோவர் சிறப்பாக செயல்பட்டு செவ்வாய் கிரகம் சார்ந்த பல புகைப்படங்களை பூமிக்கு அனுப்பி வந்தது.

புயலில் சிக்கிய விண்கலம் செயலிழந்து விட்டது

இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் மிகவும் மோசமான புயல் செவ்வாய் கிரகத்தில் வீசியதால் ஆபர்ச்சுனிட்டி ரோவர் சற்று செயல் இழந்தது. இதைத் தொடர்ந்து ஜூன் மாதம் 15ம் தேதி இரவு செவ்வாய் கிரகத்தில் வீசிய பெரிய புயல் மொத்தமாக ஆக்கிரமித்தது. இதனால் காணாமல் போன ரோவரின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. மேலும் சூரிய ஒளி கிடைக்காததால் சார்ஜ் இல்லாமல் ரோவரின் 6 சக்கரங்களும் செயல் இழந்து வந்தன. அதன் பிறகு நாசா ஒருமுறைக் கூட தொடர்பு கொள்ள முடியவில்லை.

15 ஆண்டுகால சகாப்தம் முடிவுக்கு வந்தது

இந்நிலையில் ரோவரின் ஒரே ஒரு பாகம் மட்டும் இடையில் ஒருமுறை கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அதனுடன் கடந்த 7 மாதங்களாக தொடர்பு கொள்ள விஞ்ஞானிகள் கடுமையாக போராடினர். ஆனால் அந்த ரோவரில் படிந்த தூசு காரணமாக அது தொடர்ந்து செயல்பட முடியாமல் போனது. இறுதியாக நேற்று தொடர்பு கொள்ள முயன்றும் பயனளிக்காததால் ஆபர்ச்சுனிட்டி ரோவர் விண்கலம் முற்றிலும் செயலிழந்து விட்டதாக நாசா அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது. ஆபர்ச்சுனிட்டி ரோவர்  பல சாதனைகள் படைத்தது இருப்பதால் இந்நேரத்தை கொண்டாட்டமாக எடுத்து கொள்ள வேண்டும் என்று நாசா விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளார். செவ்வாய் கிரகத்தில் 15 ஆண்டுகளாக கோலோச்சி நின்ற ஆபர்ச்சுனிட்டி ரோவர் விண்கலத்தின்  சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Mars , spacecraft, space, NASA, Mars,Oppurtunity rover
× RELATED ருசக யோகம்