×

மக்கள் தொகைக்கு ஏற்ப எண்ணிக்கை அதிகரித்துள்ளதா? தமிழகத்தில் பணிச்சுமையால் ஆண்டுக்கு 200 போலீசார் தற்கொலை: நீதிபதிகள் வேதனை

மதுரை: தொடர் பணிச்சுமையால் ஆண்டுக்கு ஆயிரம் போலீசார் பணியில் இருந்து விலகுகிறார்கள். 200 போலீசார் தற்கொலை செய்கின்றனர் என  ஐகோர்ட் கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: தமிழக மக்கள் தொகை எண்ணிக்கை 8.25 கோடி. சென்னையில் 135 போலீஸ் ஸ்டேஷன் உள்பட தமிழகம் முழுவதும் 1,324 போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன.  மக்கள் தொகைக்கு ஏற்றவாறு போலீசாரின் எண்ணிக்கை இல்லை. இதனால் தமிழகத்தில் தினந்தோறும் கொலை, செயின் பறிப்பு, கொள்ளை, ஆள் கடத்தல்,  ஏடிஎம் திருட்டு என நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கூலிப்படைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.கூலிப்படைகளுக்கு ஆதரவாக அரசியல் கட்சிகள் இருப்பதால், ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையினர் தயங்குகின்றனர். குற்றவழக்குகளில்  அரசியல்வாதிகள் தலையிடுவதால் போலீசார் முறையாக விசாரணை செய்வதில்லை. இது தங்களுக்கு சாதகமாக இருப்பதால், தற்போது ரவுடிகள்  துப்பாக்கிகளுடன் குற்றச்சம்பவத்தில் ஈடுபடுகின்றனர். ஆயுதங்களுடன் செயின் பறிப்புகளில் ஈடுபடுவதால், பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியாத  நிலை உள்ளது.

சப்-இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டர்களில் ஒருசிலர் சாதிரீதியாக பழகி ரவுடிகள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. தமிழகத்தில் உள்ள 1,324 போலீஸ்  ஸ்டேஷன்களுக்கு ஒரே ஒரு கட்டுப்பாட்டு அறை சென்னையில் மட்டும் உள்ளது. 100க்கு அழைத்தால் சென்னைக்குத்தான் அழைப்பு செல்கிறது. கட்டுப்பாட்டு  அறையில் பணி புரிபவர்களுக்கு தமிழகத்தில் அனைத்து பகுதிகளும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவசரத்திற்கு 100ஐ அழைக்கும்போது சென்னைக்கு சென்று  மீண்டும் சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் செல்வதால், போலீசார் சம்பவ இடத்திற்கு செல்ல 3 மணிநேரம் ஆகிறது. இதனால் குற்றச்சம்பவத்தில்  ஈடுபடுபவர்கள் எளிதாக தப்பி செல்கின்றனர்.
 எனவே, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நவீனமயமாக்கப்பட்ட கட்டுப்பாட்டு அறைகள் அமைக்க வேண்டும். போலீஸ் ஸ்டேஷன்களின்  எல்லைகள் தொடங்கும் மற்றும் முடியும் இடங்களில் உள்ள தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலைகளில் போலீஸ் ஸ்டேஷன்களின் தொடர்பு எண்களை  எழுதிவைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.

 இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘தமிழகத்தில் போலீசார் கூடுதல்  பணிச்சுமையுடன் பணிபுரிகின்றனர். இதனால் போலீசார் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர். விசேஷம், திருவிழா, பண்டிகை போன்ற நேரங்களில் நாம்  வீட்டில் இருக்கும்போது, போலீசார் பணிபுரிகின்றனர். இதனால் அவர்கள் குடும்பத்துடன் சந்தோஷமாக இருப்பதில்லை. ஒரு இடத்தில் கலவரம் ஏற்படும்போது  அனைவரும் வீட்டிற்கு பயணிக்கிறோம். ஆனால் போலீசார் வீட்டில் இருந்து கலவர பகுதியில் பாதுகாப்பு பணிக்கு செல்கின்றனர். தமிழகத்தில் மக்கள் தொகைக்கு  ஏற்ப போலீசார் எண்ணிக்கை அதிகரித்துள்ளதா? தொடர் பணிச்சுமையால் தமிழகத்தில் வருடத்திற்கு ஆயிரம் பேர் போலீஸ் பணியில் இருந்து விலகுகிறார்கள்.  200 போலீசார் தற்கொலை செய்கிறார்கள்,’’ என கூறிய நீதிபதிகள் வழக்கை 2 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : population ,judges ,police suicides ,Tamil Nadu , Population, Tamil Nadu, workload, police suicide, judges, pain
× RELATED தேர்தலில் வாக்களிப்பதை குடிமக்களின்...