×

டெல்லி ஓட்டல் தீ விபத்தில் சிக்கி திருச்சி பல் டாக்டர் பரிதாப சாவு: சென்னைக்கு இன்று உடல் வருகை

திருச்சி: டெல்லி ஓட்டல் தீ விபத்தில் உயிரிழந்த திருச்சி டாக்டர் உடல் இன்று சென்னை கொண்டு வரப்படுகிறது. ராணுவத்திற்கான ஆராய்ச்சியை  முடித்து அனுமதி பெற சென்ற நிலையில் பலியானது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.டெல்லி கரோல் பாக் குருத்வாரா சாலையில், 6 மாடி கட்டிடத்தில் அர்பித் பேலஸ் என்ற நட்சத்திர ஓட்டல் இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் அதிகாலை  ஏற்பட்ட  தீவிபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களில் திருப்பூரை சேர்ந்த  2 பேர் என்று  தெரியவந்தது. இந்தநிலையில், தமிழகத்தை சேர்ந்த மேலும் ஒருவர் உயிரிழந்திருப்பது தெரியவந்தது. திருச்சி வயலூரை சேர்ந்தவர் சங்கரநாராயணன்(55). பல் டாக்டர். இவர்,  திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பல் டாக்டராக பணியாற்றி வந்தார்.

 இவர் ராணுவத்வீரர்களுக்கு காயம் ஏற்பட்டு அதிகளவில் ரத்தம்  வெளியேறுவதை கட்டுப்படுத்துவது குறித்த ஆராய்ச்சி நடத்தி வந்தார். அவருக்கு உதவியாக திருச்சியை சேர்ந்த டாக்டர் அவினாஸ்காந்தி இருந்தார். கடந்த சில  மாதங்களுக்கு முன் ஆராய்ச்சி முடிவுகளை தொகுத்து ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் சங்கர் நாராயணன் வழங்கியுள்ளார். அவரது ஏற்பாட்டின்பேரில்  ஆராய்ச்சி முடிவுகளை தொடர்வதற்கு ஒப்புதல் பெறுவதற்காக கடந்த 11ம் தேதி மதியம் சென்னையில் இருந்து டெல்லி சென்றார்.  12ம் தேதி (நேற்று  முன்தினம்) காலை மருந்துகள் ஒப்புதல் அளிக்கும் அலுவலகத்திற்கு செல்ல இருந்த நிலையில் அதிகாலை தீ விபத்தில் சிக்கி பலியாகி உள்ளார். பலியான  சங்கரநாராயணனுக்கு பாரதி என்ற மனைவியும், ரங்கபிரியா என்ற மகளும், ராகவ சின்கன் என்ற மகனும் உள்ளனர். மகள், சென்னையில் உள்ள எஸ்.ஆர்.எம். பல் மருத்துவ கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார்.

 மகன் பி.இ. முடித்து, அமெரிக்காவில் எம்.எஸ்.  படித்து வருகிறார். மகளின் படிப்புக்காக சென்னை வேளச்சேரி விஜய நகர் 9-வது மெயின்ரோட்டில் வீடு எடுத்து கடந்த 3 ஆண்டாக சங்கரநாராயணன்  குடும்பத்துடன் தங்கி இருந்தார். சங்கரநாராயணன் பலியான தகவல் சென்னையில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு கிடைத்தது. இதையடுத்து மகள், மனைவி  ஆகியோர் உடனடியாக டெல்லி புறப்பட்டு சென்றனர். அவரது உடல் இன்று சென்னை கொண்டு வரப்பட உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Trichy ,dentist ,hospital fire accident , Delhi hotel, fire accident, Trichy dentist, Chennai, body, visit
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...