மக்களவை தேர்தலுக்கு முன்பாகவே விவசாயிகளுக்கு ரூ.4,000 நிதியுதவி: மத்திய அரசு தடாலடி அறிவிப்பு

புதுடெல்லி: மக்களவை தேர்தலுக்கு முன்பாகவே விவசாயிகளுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள ரூ.6 ஆயிரம் நிதியுதவியில் ரூ.4000-த்தை 2 தவணைகளாக  வழங்க மத்திய அரசு திடீர் முடிவு செய்துள்ளது.  மத்திய அரசு சமீபத்தில் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. பிரதான் மந்திரி கிஷான் சம்மன் நிதி என்ற இந்த திட்டத்தின் கீழ் 2 ஹெக்டேருக்கும் குறைவான நிலம் வைத்துள்ள சிறு, குறு விவசாயிகள் 12 கோடி பேர்  பயனடைவார்கள் என அறிவிக்கப்பட்டது. இவர்களுக்கு 3 தவணைகளில் வங்கி கணக்கில் நேரிடையாக இந்த தொகை செலுத்தப்படும் என மத்திய நிதியமைச்சர்  பியூஷ் கோயல் அறிவித்தார். இந்த நிதியுதவி திட்டம் இந்த நிதியாண்டிலேயே தொடங்கப்படும் எனவும், முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் மார்ச் மாதத்திற்குள்  விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த நிதியில் ரூ.4,000த்தை மக்களவை தேர்தலுக்கு முன்பாக வழங்க மத்திய வேளாண்மை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக புதிய தகவல்  வெளியாகியுள்ளது.  இது தொடர்பாக அந்த அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:  பிரதான் மந்திரி கிஷான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் பயன் அடைய தகுதியுள்ள விவசாயிகளை அடையாளம் காணும் பணியில் மாநிலங்கள் தீவிரமாக  ஈடுபட்டுள்ளன. பயன் பெறுபவர்கள் குறித்த முதல் பட்டியல் மிக விரைவில் தயாராகிவிடும்.

கர்நாடகா, ஆந்திரா, குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களில் நிலம் தொடர்பான ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. தெலங்கானா, ஒடிசா, ஜார்க்கண்டில்  மாநில அரசு இது போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருவதால் இது குறித்த பட்டியல் எளிதாக பெறப்பட்டுள்ளது. எனவே, வரும் மக்களவை தேர்தலுக்கு முன் விவசாயிகளுக்கு 2 தவணைகளாக ₹4 ஆயிரத்தை வங்கி கணக்கில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  மேலும், எந்த நேரத்தில் தேர்தல் அறிவிப்பு வெளியானாலும் இந்த நிதி திட்டத்தை செயல்படுத்துவதில் பாதிப்பு இருக்காது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: