×

அமைச்சர்களுடன் காங். வாக்குவாதம் தேர்தலில் தனித்து நிற்க அதிமுக தயாரா?

தேர்தலில் தனித்து போட்டியிடுவது தொடர்பாக அமைச்சர்களுக்கும், காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் ராமசாமிக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் ராமசாமி: உள்ளாட்சித் தேர்தல்  தமிழகத்தில் நடக்குமா, நடக்காதா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.  தேர்தலை கண்டு நீங்கள் அஞ்சுகிறீர்கள். அமைச்சர் வேலுமணி: உள்ளாட்சித் தேர்தல் குறித்து பலமுறை பேசியாகி விட்டது. யாரால் தேர்தல் நின்றது என்று மக்களுக்குத் தெரியும். எப்போது தேர்தல் வந்தாலும் நாங்கள் சந்திப்போம்.
எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்: தொடர்ந்து அதே பதிலை அமைச்சர் கூறிவருகிறார். ஏதோ திமுகதான் அதற்கு காரணம் என்பதுபோல கூறுகிறார். உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டாம் என்று நாங்கள் கூறவில்லை. முறையாக நடத்த வேண்டும் என்றுதான் கேட்டோம். அதாவது, இட ஒதுகீடுமுறையாக செயல்படுத்த வேண்டும் என்றுதான் கேட்டோம். தேர்தல் முறையாக நடத்த நீதிமன்றம் பலமுறை எச்சரித்ததை மறந்துவிட வேண்டாம். அமைச்சர் வேலுமணி: இடஒதுக்கீடு குறித்து நீதிமன்றத்தில் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது வார்டு வரையறை பணி நடக்கிறது. இது பெரிய வேலை. அதற்கு பிறகு வாக்காளர் பட்டியல் தயாரித்தல், வாக்குச் சாவடிகள் அமைத்தல் போன்ற பணிகள் உள்ளன. அந்த பணி முடிந்ததும் தேர்தல் நடத்துவோம்.
ராமசாமி: வார்டு வரையறை முடிய காலதாமதம் ஆகும் என்கிறார். எந்த தேதியில் தேர்தல் நடத்துவீர்கள் என்று கூறவில்லை. நீங்கள் ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் இன்னும் 2 ஆண்டுகள்தான் உள்ளன. அதற்குள் நடத்த வேண்டும். அது ஒருபுறம் இருக்க, திருவாரூர் தேர்தல் ஏன் தள்ளிப் போகிறது. அரசு தலைமைச் செயலாளர் தேர்தல் ஆணையத்துக்கு எழுதிய கடிதத்தில், மழை பெய்வதை காரணம் காட்டியுள்ளார். உள்ளாட்சித் தேர்தலை தள்ளிப் போடுகிறீர்கள், இடைத் தேர்தலை தள்ளிப்போடுகிறீர்கள், ஆனால் உங்களால் பாராளுமன்றத் தேர்தலை தள்ளி வைக்க முடியாது.

முதல்வர்: மழையை காரணமாக சுட்டிக்காட்டி எல்லா கட்சியை சேர்ந்தவர்களும்தான் கடிதம் கொடுத்தனர். திமுக கூட தெரிவித்தது.
மு.க.ஸ்டாலின்: திருவாரூர் தேர்தலை தள்ளி வைக்க நாங்கள் கூறவில்லை. ஏன் இந்த தேர்தலை மட்டும் தனியாக நடத்த வேண்டிய அவசியம் என்ன என்றுதான் கேட்டோம்.
முதல்வர்: காங்கிரஸ் உறுப்பினர் திருவாரூர் தேர்தலைப் பற்றி கேட்டார். அதனால் அதுபற்றி கூறினேன்.  தேர்தல் நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் கேட்க வேண்டும். தேர்தல் வந்தால் நாங்கள் நடத்த தயாராக இருக்கிறோம்.
ராமசாமி: தேர்தல் விரைவாக நடக்க வேண்டும் என்பது எங்கள் கருத்து. 21 தொகுதிகளில் பிரதிநிதிகள் இல்லை.
அமைச்சர் வேலுமணி: காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் 1967க்கு பிறகு தனித்து நிற்கவில்லை.
ராமசாமி: பாஜ உங்களுடன் கூட்டணி வைத்தால், எந்தக் கட்சியும் உங்களுடன் கூட்டணிக்கு வராது. கூட்டணி இல்லாமல் போட்டியிட நீங்கள் தயாரா?
அமைச்சர் வேலுமணி: பாராளுமன்றத் தேர்தலில்  நாங்கள் தனித்து நிற்கிறோம். நீங்கள் போட்டியிடத் தயாரா?
அமைச்சர் செங்கோட்டையன்: தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் தனித்து நின்று வெற்றி பெற்ற இயக்கம் அதிமுக.
அமைச்சர் ஜெயக்குமார்: அதிமுக தனித்து நின்ற வரலாறு உண்டு. உங்கள் கட்சி அப்படி அல்ல.
ராமசாமி: நான் எனது தொகுதியில் தனியாகத் தான் நின்று வெற்றி பெற்றேன். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா செல்வாக்கில் வெற்றி பெற்று நீங்கள் இங்கு அமர்ந்துள்ளீர்கள். அவர் இல்லாமல் நீங்கள் தேர்தலை சந்திக்க முடியாத நிலை உள்ளது.
அமைச்சர் செங்கோட்டையன்: கூட்டுறவு தேர்தலில் அனைத்தும் நாங்கள்தான் வெற்றி பெற்றோம்.
முதல்வர்: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் செல்வாக்கில்தான் வெற்றி பெற்றோம். நீங்கள் எந்த ெசல்வாக்கில் வெற்றி பெற்றீர்கள்.
ராமசாமி: என் தந்தை 4 முறை எம்எல்ஏவாக ஒரே தொகுதியில் வெற்றி பெற்றார். அவரைத் தொடர்ந்து 5வது முறையாக நான் வெற்றி பெற்றுள்ளேன். அது எனது சொந்த செல்வாக்கு. நீங்கள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருக்கும் போது தேர்தலை சந்தித்ததும், ஆர்கேநகர் தேர்தலை சந்தித்ததும் தெரியும். உங்கள் பலத்தை நிரூபிக்க தேர்தலை நடத்துங்கள்.
துணை முதல்வர்: காங்கிரஸ் கட்சி, தமிழகத்தில் தேர்தலை சந்திக்கும் போது திமுக அல்லது அதிமுக கூட்டணியில்தான் நிற்கிறீர்கள். தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் கூட்டணி இல்லாமல் தனித்தனியாக தேர்தலில் நின்றால் நாங்களும் நிற்கத் தயார். நீங்கள் நிற்கத் தயாரா?



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : ministers ,AIADMK ,election , Cong, ministers Arguments, AIADMK
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...