×

சேலம் தலைவாசலில் 396 கோடியில் ஆசியாவிலேயே பெரிய நவீன கால்நடை பூங்கா: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை: சேலம் தலைவாசலில் ஆசியாவிலேயே பெரிய நவீன கால்நடைப்  பூங்கா  ₹396 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.   நேற்று 110 விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிடப்பட்ட அறிவிப்பு:  சேலம் மாவட்டம், தலைவாசல் கூட்டு ரோட்டிற்கு அருகில் தேசிய நெடுஞ்சாலைைய ஒட்டி அமைந்துள்ள கால்நடை பராமரிப்பு துறைக்கு சொந்தமான 900 ஏக்கர் பரப்பில் உலகத் தரம் வாய்ந்த ஆசியாவிலேயே பெரிய ஒருங்கிணைந்த பல்துறை பல்நோக்குடன் கூடிய நவீன கால்நடைப் பூங்கா ஒன்று சுமார் ₹396 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.  மூன்று பிரிவுகளாக அமைய உள்ள இப்பூங்காவின் முதலாவது பிரிவில் நவீன வசதிகளைக் கொண்ட கால்நடை மருத்துவமனை, நவீன பண்ணை முறைகளை விவசாயிகளுக்கு எடுத்துக்காட்டும் வகையில் கறவை மாட்டுப்பண்ணை, உள்நாட்டு மாட்டினங்களான காங்கேயம், உம்பளாச்சேரி, ஆலம்பாடி, புலிக்குளம் மற்றும் பர்கூர் ஆகியவற்றின் பாதுகாப்பு மற்றும் இனப்பெருக்கப் பண்ணை, செம்மறி மற்றும் வெள்ளாட்டின பண்ணை, பன்றிகள், கோழியினப் பிரிவுகள் அமைக்கப்படும்.

மேலும் நாட்டின நாய் இனங்களான ராஜபாளையம், சிப்பிப்பாறை, கோம்பை, கன்னி ஆகியவற்றுக்கான இனப்பெருக்கப் பிரிவுகளைக் கொண்ட கால்நடை பண்ணை வளாகம் அமைக்கப்படும். இரண்டாம் பிரிவில், பால், இறைச்சி மீன் மற்றும் முட்டை போன்ற உணவுப்பொருட்களை பாதுகாத்து பதப்படுத்தவும், அவற்றிலிருந்து பல்வேறு உபபொருட்கள், மதிப்பு கூட்டிய பொருட்களை தயார் செய்யவும், அவற்றை சந்தைப்படுத்த வசதி ஏற்படுத்தப்படும். 3ம் பிரிவில் பயிற்சி, விரிவாக்கம், கல்வி, ஆராய்ச்சி மற்றும் தொழில் முனைவோருக்கான பயிலரங்கத்துடன் பல்வேறு அம்சங்கள் கொண்ட வளாகம் அமைக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.  உலகத்தரம் வாய்ந்த இவ்வளாகம், மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழில்முனைவோர் மற்றும் நுகர்வோர் பயன்பெறும் வகையில், அனைத்து அடிப்படை வசதிகளும் கொண்ட வளாகமாக அமையும்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : animal park ,Edappadi Palani ,Asia ,Salem , Salem headed ,396 crores, ,animal park , Asia
× RELATED பிரான்சில் இருந்து கடல் வழியாக...