சத்தியமூர்த்திபவனில் மகிளா காங்கிரஸ் பேனர் அகற்றம்: போலீசாருடன் கடும் வாக்குவாதத்தால் பரபரப்பு

சென்னை: சத்தியமூர்த்தி பவனில் நுழைவுவாயிலில் கட்டப்பட்டிருந்த மகிளா காங்கிரஸ் பேனரை போலீசார் அகற்றியதால் கட்சி நிர்வாகிகள் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு மகிளா  காங்கிரஸ் சார்பில் பேச்சாளர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் நேற்று சத்தியமூர்த்திபவனில் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு, தமிழக மகிளா காங்கிரஸ் தலைவி ஜான்சி ராணி தலைமை வகித்தார். தமிழக மேலிட  பொறுப்பாளர் பாத்திமா ரோஸ்னா கலந்து கொண்டார். பயிற்சி முகாமை வரவேற்று சத்தியமூர்த்தி பவன் நுழைவு வாயிலில் பிரமாண்ட பேனர் கட்டப்பட்டிருந்தது. காலை முதல் இந்த பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்களில்  மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் எப்படி பேசுவது என்பது குறித்து மூத்த நிர்வாகிகள் பயிற்சி அளித்தனர். முகாம் நடைபெற்று கொண்டிருந்த நிலையில் மாலையில் அங்கு வந்த போலீசார் திடீரென அந்த பேனரை அகற்ற  முயன்றனர்.

 இதையறிந்த, மகிகளா காங்கிரசார் உடனடியாக கூட்டத்தில் இருந்து ஒட்டு மொத்தமாக திரண்டு வெளியே வந்தனர். அவர்கள் பேனர் சத்தியமூர்த்திபவனுக்குள் தான் கட்டப்பட்டுள்ளது. அதை அகற்ற முடியாது என்று  போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சென்னை மாநகராட்சி உத்தரவுபடி தான் பேனர் அகற்றப்படுகிறது என்று போலீசார் அவர்களிடம் விளக்கம் அளித்தனர். ஆனால் சத்தியமூர்த்திபவன் வளாகத்தில் தான் பேனர் கட்டப்பட்டுள்ளது. அதற்கு யாரிடமும் அனுமதி பெற தேவையில்லை என்று பேனரை அகற்ற விடமாட்டோம் என்று கூறியதால் இருதரப்புக்கும் இடையே கடும்  வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, பயிற்சி முகாமுக்கு மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் சென்றனர். அதை பயன்படுத்தி கொண்ட போலீசார் வேகமாக அந்த பேனரை அகற்றிவிட்டு சென்றனர். இதனால் மீண்டும் சிறிது நேரம்  பரபரப்பு நிலவியது.பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED குழந்தை விற்பனை வழக்கு புரோக்கர்கள் 3 பேர் ஜாமீன் மனு தள்ளுபடி