×

சென்னை மெட்ரோ ரயிலில் நாளை முதல் கட்டணம் வசூல்... மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் நாளை முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னையில் 45.1 கி.மீ. தூரத்திற்கான முதல் வழித்தட திட்டம் முடிந்த நிலையில் கட்டணம் குறைக்கப்படாததால் இந்த திட்டம் ஏழைகளுக்கு பயன் தருவது எப்போது என்ற  கேள்வி எழுந்துள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், விரைவான சேவையை பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கத்துடன் கடந்த 2009ம் ஆண்டு மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் தொடங்கப்பட்டது.  இதையடுத்து முதல் கட்டமாக கடந்த 2015ம் ஆண்டு கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையில் 10 கி.மீ. தூரத்திற்கு மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது.

இதன்பிறகு படிப்படியாக மெட்ரோ  ரயில் பணிகள் முடிவடைந்து 35 கி.மீ. தூரத்திற்கு மெட்ரோ ரயில் சேவை தற்போது செயல்படுகிறது. இந்தநிலையில், முதல் வழித்தட திட்டத்தின் வண்ணாரப்பேட்டையில் இருந்து டி.எம்.எஸ் வரையிலான 10 கி.மீட்டர் தூரத்திலான சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். கடந்த 10-ம் தேதி பிற்பகல் 3.15 மணிக்கு காணொலி காட்சி மூலம் மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்தார். மெட்ரோ ரயிலில் 4 நாட்களாக பொதுமக்கள் கட்டணமின்றி செல்லலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து மெட்ரோ ரயிலுக்கான புதிய கட்டண பட்டியலை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டது. அதிகபட்ச டிக்கெட் விலை ரூ.60ஆகவும், குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.10ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டாலும் குறையாத கட்டணத்தால் மெட்ரோ ரயில் சேவையானது இன்னும் ஏழைகளுக்கு எட்டாக்கனியாகவே  உள்ளது என பொதுமக்கள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர்.

சென்னையில் புறநகர் ரயில்கள் மூலம் தினந் தோறும் சுமார் 4.5 லட்சம் பேர் வரையில் பயணம் செய்து வருகின்றனர். இதேபோல், மாநகர பேருந்துகளில் தினமும் சராசரியாக 45  லட்சம் பேர் வரையிலும் பயணம் செய்கின்றனர். ஆனால், மெட்ரோ ரயில்களில் தினந்தோறும் சுமார் 40 முதல் 50 ஆயிரம் பேர் வரையில் மட்டுமே பயணம் செய்து வருகின்றனர். மெட்ரோ ரயில்  சேவை என்பது மக்களின் அன்றாட பயணம் என்பதை விடுத்து அவசர கால பயணமாகவே உள்ளது.

சென்னைக்கு முன்பாகவே கொல்கத்தா, மும்பை, டெல்லி,  பெங்களூரு ஆகிய பெருநகரங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றது. ஆனால், சென்னையை விட மற்ற மெட்ரோ ரயில் நிலையங்களில் கட்டணம் குறைவாகவே வசூல் செய்யப்படுகிறது. குறிப்பாக 190 கிலோ மீட்டரில் 134 நிலையங்களை கொண்ட டெல்லி  மெட்ரோ ரயில் நிலையத்தில் ஆரம்ப கட்டணம் ரூ.10ல் இருந்து அதிகபட்ச கட்டணம் ரூ.50 வரை மட்டுமே வசூலிக்கப்படுகிறது.

நாட்டின் தலைநகர், அதுவும் விலைவாசி அதிகமாக உள்ள  நகரிலேயே குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கொல்கத்தாவில் குறைந்த கட்டணமாக ரூ.5ம், அதிகபட்சமாக ரூ.25ம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் சென்னையில்தான் ரூ.10 முதல் ரூ.50 வரை  கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து மெட்ரோ ரயில்களையும் ஒப்பிடும் போது சென்னை சென்னை மெட்ரோ ரயில் பயண கட்டணம் தான் அதிகம்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chennai Metro Rail ,Administration Announcement , Chennai, Metro Train, Charge Collections, Metro Admin
× RELATED 3 பெட்டிகள் கொண்ட 138 ஓட்டுநர் இல்லா...