×

நெல்லை மாவட்ட பகுதிகளை இணைக்கும் கொல்லம் - வேளாங்கண்ணி ரயில் நிரந்தரம் செய்யப்படுமா?: பயணிகள் எதிர்பார்ப்பு

நெல்லை: நாகர்கோவில் மற்றும் கொல்லத்தில் இருந்து  வேளாங்கண்ணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் முன்பதிவுகள் நிரம்பி வழிவதால் இவ்விரு ரயில்களையும் நிரந்தரம் செய்ய வேண்டும் என பயணிகள் விரும்புகின்றனர். நெல்லை, தூத்துக்குடி குமரி மாவட்டங்களில் உள்ள கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவர்களின் புனித இடமான வேளாங்கண்ணி மாதா கோவிலுக்கும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி மாதா கோவிலுக்கும் அதிகளவில் செல்கின்றனர். குமரி மாவட்டத்திலிருந்து தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம் போன்ற மாவட்டங்களுக்கு ரயிலில் செல்ல நேரடி ரயில் இல்லை. நெல்லை, தூத்துக்குடியில் இருந்து செல்வோருக்கு செந்தூர் எக்ஸ்பிரஸ் சில இடங்களை மட்டுமே தொட்டு செல்வதாக உள்ளது. ஆனால் நேரடி ரயில் வசதிகள் இல்லை. வேளாங்கண்ணி செல்பவர்கள் திருச்சி சென்று அங்கிருந்து மாற்று ரயிலில் பயணித்து வருகின்றனர். நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலன் கருதி வேளாங்கண்ணிக்கு நேரடி ரயில் வசதிகள் வேண்டும் என்ற கோரிக்கை கடந்த ஐந்து ஆண்டுகளாகவே இருந்து வருகிறது.

இந்நிலையில் வார விடுமுறையை ஒட்டி வேளாங்கண்ணி செல்ல வசதியாக நாகர்கோவிலிருந்து மதுரை, திருச்சி வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு வாராந்திர ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்து இயக்கி வருகிறது. இந்த ரயில் வள்ளியூர், நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், நீடாமங்கலம், திருவாரூர், நாகப்பட்டிணம் ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது. நெல்லை மாவட்டத்தின் பிற பகுதிகளையும் இணைக்கும் வகையில் கொல்லத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு செங்கோட்டை மார்க்கத்திலும் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் கடந்த 3ம் தேதி முதல் மார்ச் 24ம் தேதி வரை ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் வேளாங்கண்ணியில் இருந்து மாலை 5.15 மணிக்கு புறப்படுகிறது. நெல்லைக்கு மறுநாள் காலை 4 மணிக்கு வந்து சேருகிறது. மறுதினம் 10.15 மணிக்கு கொல்லம் போய் சேருகிறது. மறுமார்க்கமாக இந்த ரயில் கடந்த 4ம் தேதி முதல் மார்ச் 25ம் தேதி வரை ஒவ்வொரு திங்கள் கிழமையும் கொல்லத்தில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு நெல்லைக்கு இரவு 11.25 மணிக்கு வந்து சேருகிறது.

மறுதினம் வேளாங்கண்ணிக்கு காலை 10 மணிக்கு போய் சேருகிறது. இந்த ரயில் கொல்லம், கொட்டாரக்காரா, புனலூர், தென்மலை, ஆரியங்காவு, செங்கோட்டை, தென்காசி, பாவூர்சத்திரம், கீழகடையம், அம்பை, சேரன்மகாதேவி, நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், நீடாமங்கலம், திருவாரூர், நாகப்பட்டணம் ஆகிய நிறுத்தங்களில் நின்று செல்கிறது.இந்த சிறப்பு ரயில்களுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இதுகுறித்து நெல்லை பயணிகள் சங்கத்தை சேர்ந்த  அந்தோணி கூறுகையில், ‘‘கொல்லம்- வேளாங்கண்ணி ரயிலுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. சிறப்பு ரயில் என்றாலும் முன்பதிவுகள் நிரம்பி வழிகின்றன. நெல்லை- கொல்லம் ரயில்பாதை அகல ரயில்பாதையாக மாற்றப்பட்ட நாளில் இருந்தே இப்பாதையில் எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்கிட கோரிக்கை வைத்தோம். இப்போது இந்த ரயில் இயக்கப்படுவதால் இந்த ரயிலை நிரந்தரம் செய்ய வேண்டும். வேளாங்கண்ணிக்கு இந்த ரயிலை தினசரி ரயிலாக இயக்கிட வேண்டும்.’’ என்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : districts ,Kollam-Velankanni Railway ,Nellai , Nellai, Kollam - Velankanni, the train will be permanent
× RELATED தென்காசி, நெல்லை உள்ளிட்ட 4...