×

புதுச்சேரியில் ஆளுநர் கிரண்பேடியை கண்டித்து முதல்வர் நாராயணசாமி தலைமையில் தர்ணா!

புதுச்சேரி : புதுச்சேரி ஆளுநர் மாளிகை முன்பு கிரண்பேடிக்கு எதிராக முதல்வர் நாராயணசாமி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இவருடன் அமைச்சர்கள்,சட்டமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். நாராயணசாமி கருப்பு சட்டையுடனும், அமைச்சர்கள், காங். மற்றும் திமுக எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் கருப்பு துண்டும் அணிந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரி மாநில கவர்னராக கிரண்பேடி பதவியேற்ற நாளில் இருந்தே யாருக்கு அதிகாரம் என்பது தொடர்பாக அமைச்சரவைக்கும், கிரண்பேடிக்கும் போராட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில், பிப்ரவரி 11ம் தேதி முதல் புதுச்சேரியில் இருசக்கர வாகனத்தில் பயணிப்போர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும், கார் ஓட்டுபவர்கள் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்றும் ஆளுநர் கிரண்பேடி உத்தரவின்பேரில் டி.ஜி.பி சுந்தரி நந்தா அறிவித்திருந்தார்.

ஆனால் ஹெல்மெட் தலைக்கவசம் அணிவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும், உடனே அபராதம் கூடாது என்று முதல்வர் நாராயணசாமி கூறியிருந்தார். இந்த அறிவிப்பை ஆளுநர் ஏற்கவில்லை. இரு சக்கர வாகன ஓட்டிகள் பலரும் போலீசாரிடம் பிடிபட்டு அபராதம் செலுத்தி வருகிறார்கள். மேலும் கிரண்பேடியே சாலையில் இறங்கி, இதுபோன்ற சோதனைகளை நேரில் பார்வையிட்டார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக புதுச்சேரியில் நேற்று மண்சட்டியில் தலைக்கவசம் அணிந்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதனை தொடர்ந்து, முதல்வரின் விருப்பத்திற்கு எதிராக ஆளுநர் செயல்படுவதாக கூறி, நாராயணசாமி அதிருப்தியடைந்தார்.

மேலும் அமைச்சரவை எடுக்கும் முடிவுக்கு கிரண்பேடி முட்டுக்கட்டையாக இருக்கிறார் என்றும், மக்கள்நல திட்டங்களை செயல்படுத்துவதில் ஈடுபாடு செலுத்தவில்லை எனவும் புகார்கள் எழுப்பப்பட்டது. இந்த நிலையில், அரசு நிகழ்ச்சிகளை ரத்து செய்த புதுச்சேரி முதல்வர், அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் எம்எல்ஏக்களுடன் இன்று அவசர ஆலோசனை நடத்தினார். இதன்பிறகு, அக்கூட்டத்தில் எடுத்த முடிவின்படி, கருப்பு சட்டை அணிந்து ஆளுநர் மாளிகைக்கு எதிரே தர்ணாவில் ஈடுபட்டார். புதுச்சேரி வரலாற்றில் முதல் முறையாக ஆளுநருக்கு எதிராக முதல்வர் தர்ணா நடத்தியுள்ள சம்பவம் இன்று நடந்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Narayanasamy ,Governor ,Puducherry , Puducherry,Chief Minister Narayanasamy,Darna,Governor
× RELATED தேனி தொகுதி அதிமுக வேட்பாளரின் காரில் சோதனை