×

கோவையில் ரூ.1 கோடி மதிப்பிலான ஐம்பொன் சிலை திருட்டு : போலீசார் தீவிர விசாரணை

கோவை : கோவையில் கோயில் பூட்டை உடைத்து ரூ.1 கோடி மதிப்பிலான ஐம்பொன் சிலை திருடப்பட்டுள்ளது. பாப்பநாயக்கன் பாளையத்தில் 300 ஆண்டுகள் பழமையான பட்டத்தரசி அம்மன் கோயில் உள்ளது. அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அந்த கோயிலில் நேற்று இரவு பூஜைகள் முடிந்த பிறகு பூசாரி வழக்கம்போல் கோயிலை பூட்டிவிட்டு சென்றுள்ளார். இந்நிலையில் இன்று காலை அவ்வழியாக சென்றவர்கள் கோவிலின் பூட்டு உடைத்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

பின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். நள்ளிரவில் மர்மநபர்கள் கோவிலுக்குள் புகுந்து உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். மேலும் ஒன்றரை அடி உயரமுள்ள சுமார் ஒரு கோடி மதிப்பிலான ஐம்பொன் சிலையும் திருடி சென்றுள்ளது தெரியவந்துள்ளது. பின்னர் சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. மேலும் கைரேகை நிபுணர்களும் ஆய்வு நடத்தினர். பட்டத்தரசி அம்மன் கோவிலில் கடந்த சில நாட்களாக திருப்பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் சிலை திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Coimbatore,idol theft, police investigate
× RELATED பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் தகுதி...