×

ரபேல் ஒப்பந்தம்...... நாடாளுமன்றத்தில் சிஏஜி அறிக்கை தாக்கல்

டெல்லி: அரசியலில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான மத்திய கணக்கு தணிக்கை குழுவின் (சிஏஜி) அறிக்கை  நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான சிஏஜி அறிக்கையை நிதித்துறை இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்தார். 114 பக்கங்களை கொண்ட சிஏஜி அறிக்கையில் ரபேல் கொள்முதல் தொடர்பாக 32 பக்கங்களில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ரபேல்: சிஏஜி அறிக்கை விவரம்
காங்கிரஸ் ஆட்சிக்கால ஒப்பந்தத்தைவிட பாஜக ஆட்சியில் ரபேல் விலை 2.86 சதவீதம் குறைவு. பாஜக ஆட்சியில் ரபேல் விமான விலை 9 % குறைத்து ஒப்புதல் என்று காங்., அமைச்சர்கள் கூறியுள்ளனர், ஆனால் அமைச்சர்கள் கூறுவது போல ரபேல் விமான விலை 9% குறைக்கப்படவில்லை. ரபேல் விமானத்தின் அடிப்படை விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. 2007-ல் முடிவு செய்த விலைக்கும் 2016-ல் முடிவு செய்த விலைக்கும் வேறுபாடு இல்லை. ரபேல் விமானத்தில் இந்திய அரசு கோரிய கூடுதல் வசதிகள் தேவையற்றவை. இந்தியத் தேவைக்கேற்ப ஏவுகணை வீசும் வசதிகளை செய்துதருமாறு இந்தியா கேட்டிருந்தது. இந்தியா கோரி இருந்த கூடுதல் வசதிகளால்தான் ரபேல் விமான விலை அதிகரித்துள்ளது. இந்தியா கேட்ட கூடுதல் வசதிகள் தான் தேவையற்றவை என்று சிஏஜி கூறியுள்ளது.  


ரபேல் ஊழல்

பிரான்சிடமிருந்து ரபேல் போர் விமானங்களை வாங்க, கடந்த காங்கிரஸ் ஆட்சியில்  பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 126 விமானங்களை வாங்க பேரம் பேசப்பட்டு வந்த நிலையில், மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. பாஜ தலைமையிலான  தேசிய ஜனநாயக  கூட்டணி அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, ரபேல் ஒப்பந்த பேச்சுவார்த்தையை துரிதப்படுத்தியது. பிரதமர் மோடி கடந்த 2016, செப்டம்பரில்  தனது பிரான்ஸ் பயணத்தின் போது, இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். பறக்கும் நிலையில் 36 விமானங்களை வாங்க இரு நாடுகளும் ஒப்பந்தம் செய்து  கொண்டன. இதில், இந்தியாவின் பங்கு நிறுவனமாக அனில் அம்பானியின் நிறுவனம் சேர்க்கப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தில் ரூ.1.30 லட்சம் கோடி ஊழல் நடந்திருப்பதாகவும் பொதுத்துறை நிறுவனமான எச்ஏஎல், உள்நோக்கத்துடன் புறக்கணிக்கப் பட்டுள்ளதாகவும்  காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. காங்கிரஸ் ஆட்சியில் ஒரு விமானம் ரூ.526 கோடிக்கு விலை பேசப்பட்ட நிலையில், பாஜ ஆட்சியில் ஒரு விமானம் ரூ.1,640  கோடிக்கு விலை பேசப்பட்டதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு வைக்கிறது. இதனால் பல கோடி நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தில்  விதிமுறைமீறல் எதுவும் நடக்கவில்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடியை நேரடியாக  குற்றம்சாட்டி வருகிறார். அதே நேரத்தில் விமானத்தின் விலையை அரசு ரகசியமாக வைத்திருப்பது மேலும் சந்தேகத்தை வலுக்கச் செய்துள்ளது. அரசியல்  களத்தில், பாஜ அரசு மீது சுமத்தப்பட்டுள்ள மிகப்பெரிய ஊழல் குற்றச்சாட்டாக இது அமைந்துள்ளது.

இதனால், இந்த விவகாரத்தில் மத்திய கணக்கு தணிக்கை குழுவின் அறிக்கை பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ஓராண்டு தயாரிப்பிற்கு பின் இன்று இந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்  கடந்த 31ம் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவடைகிறது. இதுவே 16வது மக்களவையின் கடைசி கூட்டத்தொடராகும். இன்று ஒருநாள் மட்டுமே எஞ்சியிருந்த நிலையில் மிக முக்கியமான ரபேல் குறித்த சிஏஜி அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது. 



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : CAG ,Parliament , Rafael Agreement, Parliament, CAG Report, BJP, Congress,
× RELATED சிஏஜி அம்பலப்படுத்திய மோடி அரசின்...