×

2ம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட விமானப்படை தளம் விவசாய களமாக மாறிய அவலம்

உளுந்தூர்பேட்டை:   உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் அதிக அளவு விவசாயம் செய்யும் பணிகள் மட்டுமே நடைபெற்று வந்தது. சுதந்திரத்திற்கு முன்னும், பின்னும் என எடுத்துக்கொண்டால் இதுவரையில் சொல்லிக்கொள்ளும் படியான பெரிய தொழிற்சாலைகள் கூட இல்லை. தேசிய நெடுஞ்சாலையின் மையப்பகுதியாக மட்டுமே உளுந்தூர்பேட்டை இருந்து வந்துள்ளது. ஆனால் உளுந்தூர்பேட்டைக்கு பெருமையாக கூறிக்கொள்ளும் வகையில் பாடல் பெற்ற ஸ்தலங்கள் மட்டுமே அதிக அளவு உள்ளது. ஆனால் சுதந்திரத்திற்கு முன் அதாவது சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் உளுந்தூர்பேட்டை அருகே நகர் பகுதியில் விமானப்படைதளம் அமைத்து இரண்டாம் உலகப் போரில் முக்கியத்துவம் வாய்ந்த போர் விமானபடைத் தளமாக விளங்கியது.

இன்று அந்த விமான ஓடுதளம் விவசாய பயிர்கள் காய வைக்கும் உலர் களமாக மாறியுள்ளது. உளுந்தூர் பேட்டை அருகே நகர் கிராமத்தில் விமான ஓடுதளம் ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் நாஜி படைகளுக்கும் நேசநாட்டுப் படைகளுக்கும் இடையே கடும் போர் நடந்தது. இதில் நேச நாட்டுப்படைகளின் போர் விமானங்கள் இறங்கி செல்லவும், ஆயுதங்களை பாதுகாப்பாக வைக்கவும் உளுந்தூர்பேட்டை நகர் விமான தளம் அமைக்கப்பட்டது. போர் முடிந்து அடுத்த ஒரு சில ஆண்டுகளில் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது. அதன்பிறகு முக்கிய விமானங்கள் இந்த நகர் பகுதியில் இறங்கி செல்வதற்கு வசதியாக ஓடு தளம் அமைக்கப்பட்டது. 1955ம் ஆண்டு நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திற்கு அடிக்கல் நாட்டு விழாவிற்கு அப்போதைய பிரதமர் ஜவகர்லால்நேரு இந்த நகர் விமானதளத்தில் விமானத்தில் வந்து இறங்கி, இங்கிருந்து கார் மூலம் நெய்வேலிக்கு சென்றார்.

அதன்பிறகு இதுவரையில் சுமார் 50 ஆண்டு காலத்திற்கும் மேலாக பயன்படுத்தப்படவில்லை. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் சார்பில் நெல், கோதுமை உள்ளிட்ட தானியங்களை வைத்து பாதுகாக்கும் கிடங்காக பயன்படுத்தி வந்தனர். சுமார் 60 வருடத்திற்கும் மேலாகியும் இந்த விமான ஓடுதளம் அதிக அளவு சேதம் அடையாமல் வரலாற்று சுவடாகவே உள்ளது. தற்போதும் புதிதாக கார் உள்ளிட்ட வாகனங்களை வாங்குபவர்கள் இந்த விமான ஓடுதளத்திலேயே வாகனங்களை ஓட்டி கற்றுக்கொள்கின்றனர். இந்த விமான ஓடுதளம் நகர், செங்குறிச்சி, மதியனூர், பு.மாம்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள் எல்லைக்கு உட்பட்ட சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு இருந்தது.

ஆனால் தற்போது அதிக அளவு ஆக்கிரமிப்புகள் உள்ளதால் விமான ஓடுதளம் சுமார் 150 ஏக்கரில் சுருங்கியுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இந்த விமான ஓடுதளத்தில் விமான பயிற்சி மையம் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் இதற்காக சென்னை, கோவை மற்றும் புதுச்சேரியில் இருந்து வந்த தனியார் விமான பயிற்சி நிர்வாகிகள் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ததோடு சரி, இதுவரையில் இதற்காக எந்த அதிகாரியும் முயற்சி எடுக்கப்படவில்லை. ஒருங்கிணைந்த கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்திற்கே பெருமை சேர்த்துவந்த இந்த வரலாற்று பெருமை மிக்க உளுந்தூர்பேட்டை நகர் விமான ஓடுதளம் இன்று பாழடைந்து விவசாயிகள் நெல் மற்றும் உளுந்து உள்ளிட்ட விவசாய இடுபொருட்களை காய வைக்கும் உலர்களமாக மாறியுள்ளது. பெருமை வாய்ந்த இந்த விமான தளத்தை புதுப்பித்து பழமை மாறாமல் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மீண்டும் கோரிக்கை வைத்து உள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Air Force Base ,farmland ,Second World War , Ulundurpettai, agriculture, crops
× RELATED “கேந்திர வித்யாலயா அளவுக்கு அரசு...