×

சென்னைக்கு அருகே வங்கக்கடலில் ‘திடீர்’ நில நடுக்கம்: ரிக்டரில் 5.1 புள்ளிகளாக பதிவானது

சென்னை: சென்னைக்கு அருகே வங்கக்கடலில் நேற்று அதிகாலை திடீரென நில நடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டரில் 5.1 புள்ளிகளாக பதிவானது. வங்கக்கடலில் நேற்று அதிகாலை 1.30 மணிக்கு நில அதிர்வு  ஏற்பட்டது. அமெரிக்க புவியியல் ஆய்வு  அறிக்கையின்படி சென்னையில் இருந்து 609 கி.மீட்டர் தொலைவில் வங்கக்  கடலுக்குள் 10 கி.மீட்டர் ஆழத்தில் இந்த அதிர்வு  மையம் கொண்டிருந்தது என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை 7.02 மணிக்கு நில அதிர்வு  உணரப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு  மையம், வெளியிட்ட  அறிவிப்பில் அதிகாலை 1.30, காலை 7.02 ஆகிய இருமுறை வங்கக்கடலில் லேசான  நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் இது  5.1 புள்ளிகளாக  பதிவானது என்றும் தெரிவித்துள்ளது. அந்தமான்,  நிகோபர் தீவுகளில் இது போன்று நில அதிர்வு அடிக்கடி ஏற்படுவது உண்டு.

 சென்னையில்  இருந்து அந்தமான் 794 கடல் மைல் தூரம் (1,470 கி.மீ), தற்போது சென்னையை அருகே உள்ள கடல் பகுதிக்கு நில அதிர்வு  நகர்ந்ததற்கான காரணம் என்ன  என்று அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். இந்த நில அதிர்வு, மடிப்பாக்கம், வேளச்சேரி, ஆதம்பாக்கம் போன்ற பகுதிகளில் உணரப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் அளித்த பேட்டி: வங்கக் கடலில் இந்திய நேரப்படி காலை 7.05 மணி அளவில் சென்னையில் இருந்து 600 கி.மீ. தொலைவில் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் 10 கி.மீ.  ஆழத்தில், ஒரு நில நடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலின்படி வடக்கு அந்தமான், சென்னை மற்றும் போர்ட் பிளேயரில் நிறுவப்பட்டுள்ள நில நடுக்க  அளவு கருவிகளில் 5.1 ரிக்டராக பதிவாகியிருக்கிறது. நில நடுக்க பகுதியானது 10 கி.மீ. ஆழத்துக்கு கீழே பதிவானதால், சென்னைக்கு பாதிப்பில்லை. இதன்  காரணமாக சுனாமி எச்சரிக்கை விடவில்லை. தற்போது கிடைத்துள்ளது முதல் தகவல் தான். அடுத்த தகவல்கள் வெளியான பிறகு மீண்டும் தெரிவிப்போம்.  கடலுக்குள் நடந்ததால் நமக்கு பாதிப்பு இல்லை. இவ்வாறு கூறினார். நில நடுக்கம் ஏற்பட்ட போதிலும் சென்னை கடலோரத்தில் பெரிய அளவில் அலைகள் எழும்பவில்லை.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : earthquake ,Bengaluru ,Chennai , Chennai, Bengalada, Suraksha, Richter
× RELATED உத்தரகாண்டில் லேசான நிலநடுக்கம்