×

மெட்ரோ ரயிலில் கடந்த 3 நாளில் மட்டும் 4.50 லட்சம் பொதுமக்கள் பயணம்

* மகிழ்ச்சியாக கொண்டாடிய பயணிகள்
* இன்றும் இலவசமாக பயணிக்கலாம்
சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் அனைத்து வழித்தடங்களிலும் இலவசமாக பயணிக்கலாம் என்று நிர்வாகம் அறிவித்ததன் எதிரொலியாக நேற்று ஒரே நாளில் 2.50 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம்  செய்துள்ளனர். இதேபோல், 4வது நாளாக இன்றும் பயணிகளுக்கு அனைத்து வழித்தடங்களிலும் இலவச சேவை வழங்கப்படுகிறது. சென்னையில் 45 கி.மீட்டர் தூரத்திற்கு நடைபெற்று வந்த முதல்கட்ட மெட்ரோ ரயில் திட்டம் முடிவடைந்து கடந்த 10ம் தேதி அனைத்து வழித்தடங்களிலும் முழுமையான சேவை தொடங்கப்பட்டது. இந்தநிலையில், மெட்ரோ  ரயில் சேவை அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் கடந்த 10,11ம் தேதிகளில் அனைத்து வழித்தடங்களிலும் சேவை இலவசமாக வழங்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்தது.
இதனால், நேற்று முன்தினம் இலவச சேவையை அனுமதிக்கப்பட்டது. முதல்நாளில் மெட்ரோ ரயிலில் திடீர் கோளாறு ஏற்பட்டதால் 50 ஆயிரம் மட்டுமே பயன்பெற்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணி  வரையில் 2 லட்சத்து 1,556 பேர் மெட்ரோ ரயிலில் இலவச பயணம் மேற்கொண்டனர். இதேபோல், 3வது நாளாக நேற்றும் அனைத்து வழித்தடங்களிலும் இலவச சேவையை மெட்ரோ ரயில் நிர்வாகம் வழங்கியது. இதனால்,  காலையில் இருந்தே அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. குறிப்பாக, சென்ட்ரல், எழும்பூர், விமானநிலையம், கிண்டி, எல்.ஐ.சி, வண்ணாரப்பேட்டை, டி.எம்.எஸ் ஆகிய ரயில் நிலையங்களில்  இலவச சேவையை அனுபவிக்க ஏராளமானோர் குவிந்தனர்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்பம், குடும்பமாக வந்து சேவையை அனுபவித்து சென்றனர். இதனால், நேற்று காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்  மெட்ரோ ரயில் இலவச சேவையை பயன்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 நாட்களில் மட்டும் 4 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் இலவச மெட்ரோ ரயில் சேவையால்  பயணடைந்துள்ளனர். இந்தநிலையில் 4வது நாளாக இன்றும் அனைத்து வழித்தடங்களிலும் பொதுமக்கள் இலவசமாக பயணிக்கலாம் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, பயணிகள் காலை 6 மணி முதல் இரவு 10 மணி  வரையில் இலவச சேவையால் பயன்பெறலாம். 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : train ,Metro , last three,days , Metro train, only 4.50 lakh people,traveled
× RELATED நெல்லை – சென்னை விரைவு ரயில் தாமதமாக புறப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு