×

அலுவலகத்தில் பாலியல் தொந்தரவு பெண் எஸ்பி, ஐஜியிடம் விசாரணை: சிபிசிஐடி போலீஸ் துவக்கியது

சென்னை: அலுவலகத்தில் பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் கொடுத்த பெண் எஸ்பி மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜியிடம் சிபிசிஐடி போலீசார் நேற்று விசாரணை நடத்தினர். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் வர உள்ளதால் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை லஞ்ச ஒழிப்புத்துறையில் பெண் எஸ்பியாக இருந்தவரை, அதே துறையில் ஐஜியாக இருந்த முருகன், அடிக்கடி வழக்கு தொடர்பான ஆலோசனை என்று கூறி தனியாக அழைத்து இரட்டை அர்த்த வசனங்களை பேசி வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் ஒரு நாள் தனது அறைக்கு ஆலோசனை நடத்த வரும்படி அழைத்த முருகன், திடீரென்று கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் எஸ்பி, ஐஜியை வேகமாக தள்ளிவிட்டு, கிடைத்த சந்தர்ப்பத்தில் கதவை திறந்து வெளியில் ஓடி வந்துள்ளார்.

இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஜிபி ஜெயந்த் முரளியிடம் புகார் செய்துள்ளார். இந்தப் புகார் டிஜிபி டி.கே.ராஜேந்திரனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் மீது உள்ள புகார்களை முருகன் விசாரித்து வருவதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க உயர் அதிகாரிகள் தயங்கியதாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு ஆதரவாகவும் செயல்பட்டதாகவும் கூறப்பட்டது. இதற்கிடையில், புகாருக்குள்ளான ஐஜி முருகன், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசியதாகவும், அப்போது டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உடன் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இதற்கிடையில், புகார் கொடுத்த பெண் எஸ்பி, லஞ்ச ஒழிப்புத்துறையில் இருந்து டம்மியான பதவிக்கு தூக்கியடிக்கப்பட்டார். இது பெண் போலீசார் மற்றும் அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையில், இந்தப் புகார் குறித்து விசாரணை நடத்த ஏடிஜிபி சீமா அகர்வால் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவும் விசாரணையை தொடங்கியபோது, ஐஜி முருகனை மாற்றினால்தான் இது நேர்மையான விசாரணையாக இருக்கும் என்று பெண் எஸ்பி கோரிக்கை விடுத்தார். ஆனால் இந்த கோரிக்கையை அதிகாரிகள் நிராகரித்து விட்டனர். இதனால், ஐஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்தநிலையில்தான், இந்தப் புகார் குறித்து, சிபிசிஐடி விசாரணைக்கு டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டார். சிபிசிஐடி போலீசாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்தநிலையில் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையின் போது, நீதிபதி போலீசாரின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். போலீசார் எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. இந்தநிலையில், சிபிசிஐடி போலீசார் அவசர அவசரமாக புகார் கொடுத்த பெண் எஸ்பி மற்றும் ஐஜி முருகனிடம் நேற்று தனித்தனியாக விசாரணை நடத்தினர். அப்போது பெண் எஸ்பி தன்னிடம் இருந்த சில ஆவணங்களை கொடுத்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக பெண் எஸ்பி குறித்து ஐஜி வர்ணித்து அனுப்பிய மேசேஜை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இது போலீஸ் வட்டாரத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில், சென்னை உயர் நீதிமன்றத்தில் பாலியல் துன்புறுத்தல் வழக்கு விசாரணையின்போது புதிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு பெண் போலீஸ் அதிகாரிகள் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : SSP ,Sexual harassment ,investigation ,IGC , Office, sexual harassment, female SP, IG, investigation, CBCID police
× RELATED ஆன்லைன் பண மோசடி: சைபர் கிரைம் விசாரணை