×

ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம் மக்களவையில் சிஏஜி அறிக்கை தாக்கல்: பொய்யான அறிக்கை என எதிர்க்கட்சிகள் நிராகரிப்பு

புதுடெல்லி: ரபேல் போர் விமான ஒப்பந்தம் உட்பட, விமானப்படை கொள்முதல் தொடர்பான சிஏஜி அறிக்கைகள் நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டன. ரபேல் ஒப்பந்தம் விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு(ஜேபிசி) விசாரணை தேவை என்ற கோரிக்கையை அரசு நிராகரித்தது. பொய்யான அறிக்கையை நாங்கள் ஏற்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் நிராகரித்தன.மக்களவை நேற்று காலை தொடங்கியதும் கேள்வி நேரத்தை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் நடத்தினார். அப்போது காங்கிரஸ் எம்.பி.க்கள் பதாகைகளுடன், ரபேல் விவகாரம் பற்றி கோஷம் எழுப்பினர். இந்த அமளிக்கு இடையே கேள்வி நேரம் 25 நிமிடங்கள் நடந்தது. அமளி தொடர்ந்ததால் குறுக்கிட்டு பேசிய சபாநாயகர், ‘‘ரபேல் விவாதம் ஏற்கனவே நடந்து முடிந்துவிட்டது. ஒவ்வொரு நாளும் நீங்கள் இடையூறு செய்ய முடியாது. இது தரம்தாழ்ந்த செயல்’’ எனக் கூறி அவையை நேற்று காலை 11.45 மணி வரை சுமார் 20 நிமிடங்களுக்கு ஒத்திவைத்தார். அவை மீண்டும் கூடியதும், ரபேல் விவகாரம் குறித்து மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேச முயற்சித்தார். ஆனால் அவரை சபாநாயகர் பேச அனுமதிக்கவில்லை.

 இதனால் கோபம் அடைந்த கார்கே, ‘‘என்ன இது? எங்களுக்கு நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவை’’ என்றார். இதற்கு பதில் அளித்த சபாநாயகர், ‘‘நேரம் வரும் போது உங்களை பேச அனுமதிக்கிறேன். இப்போது உட்காருங்கள். நீங்கள் அதிகளவு சத்தம் போட்டுவிட்டீர்கள். உங்கள் தொண்டைக்கு சற்று ஓய்வு ெகாடுங்கள்’’ என்றார்.
கார்கே கூறுகையில், ‘‘நீங்கள் பேச அனுமதிக்கவில்லை என்றால், நாங்கள் இங்கு எதற்கு இருக்க வேண்டும்?’’ என்றார். கார்கே அருகே அமர்ந்திருந்த சோனியா காந்தியும் இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தலையை ஆட்டினார். அதன்பின் காங்கிரஸ் எம்.பிக்களுடன் பேசிய கார்கே அவையின் மையப் பகுதிக்கு சென்று ரபேல் விவகாரத்தில் ஜேபிசி விசாரணை தேவை என கோஷம் எழுப்பினார். அதன்பின் பேசிய கார்கே, ‘‘ராணுவ கொள்முதல் தொடர்பான சிஏஜி அறிக்கை மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு அதன் தகவல் கசிந்துவிட்டது. ஆனால் மக்களவையில் இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை என்றார். இதற்கு பதில் அளித்த சபாநாயகர் சுமித்ரா மகாஜன், ‘‘ராணுவ கொள்முதல் உட்பட 3 சிஏஜி அறிக்கைகளை நிதித்துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் சமர்ப்பித்துள்ளார்’’ என்றார்.

அப்போது குறுக்கிட்ட உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ‘‘ரபேல் விவகாரம் அவையில் ஏற்கனவே விவாதிக்கப்பட்டது. உச்ச நீதிமன்றமும் இதுகுறித்து தீர்ப்பளித்து விட்டது’’ என்றார். இதற்கு பதில் அளித்த கார்கே, ‘‘ஜே.பி.சி விசாரணையை கண்டு பிரதமர் பயப்படுகிறார். இந்த கோரிக்கையை நீங்கள் ஏற்காததால், நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம்’’ என்றார். அதன்பின் காங்கிரஸ் எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.மாநிலங்களவையில்: உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் உறுதி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று விமான நிலையம் சென்றார். அவரை போலீசார் தடுத்துள்ளனர். இந்த பிரச்னையை சமாஜ்வாடி உறுப்பினர்கள் மாநிலங்களவையின் பூஜ்ய நேரத்தில் எழுப்ப முயன்றனர். அப்போது பதில் அளித்த மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு, ‘‘நோட்டீஸ் கொடுக்காமல் இந்த விஷயத்தை எழுப்ப அனுமதிக்க முடியாது. நீங்கள் இருக்கைக்கு செல்லுங்கள். அவையில் ஏற்கனவே அதிக நேரம் வீணாகிவிட்டது’’ என்றார்.

ஆனால் சமாஜ்வாடி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை முதலில் 2 மணி வரையும், பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. சிஏஜி அறிக்கை: ரபேல் ஒப்பந்தம் உட்பட விமானப்படை கொள்முதல் தொடர்பான சிஏஜி அறிக்கைகள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. அவை மாநிலங்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. ஜனாதிபதிக்கு அனுப்பபட்ட சிஏஜி அறிக்கையில் விமானத்தின் விலை மற்றும் கொள்முதல் நடைமுறைகள் இடம் பெற்றுள்ளன. ஆனால் அந்த சிஏஜி அறிக்கை பொதுவில் வெளியிடப்படும்போது, பாதுகாப்பு பிரிவுகளை காரணம் காட்டி, விமான விலை பற்றி விவரங்கள் அதில் இருந்து அகற்றப்படும்’’ என கூறப்படுகிறது.

 மற்றொரு சிஏஜி அறிக்கையில் விமானப்படையின் 10 இதர கொள்முதல் பற்றி விவரங்கள் இடம் பெற்றுள்ளன. அதிலும் மத்திய அரசு மற்றும் பிரான்ஸ் இடையே நடந்த விலை பேர விவரங்கள் இடம் பெற வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில், ‘‘சிஏஜி அறிக்கையில் என்ன விவரங்கள் தெரிவிக்கபப்பட்டுள்ளது என்பதை பார்ப்போம். உச்ச நீதிமன்றத்தில் மூடி முத்திரையிடப்பட்ட தபாலில் தெரிவித்த தகவல்தான், இதிலும் தெரிவிக்கப்பட்டிருக்கும் என கருதுகிறேன்’’ என்றார். இதனிடையே, சிஏஜி அறிக்கையை நாங்கள் ஏற்கவில்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் ஆவேசமாக கூறியுள்ளார். மற்ற எதிர்கட்சிகளும் உண்மையில்லாத அறிக்ைக இது என்று நிராகரித்தனர்.

* சிஏஜி அறிக்கைகள் ஜனாதிபதி ராம்நாத்  கோவிந்திடம் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது.
* மாநிலங்களவையில்  நேற்று தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து மக்களவையிலும் தாக்கல் செய்யப்பட்டது.
* ஜனாதிபதிக்கு அனுப்பப் பட்ட சிஏஜி அறிக்கையில்  விமானத்தின் விலை மற்றும் கொள்முதல் நடைமுறைகள் இடம் பெற்றுள்ளன.
* ஆனால், பொதுவில் வைக்கப்பட்ட அறிக்கையில் இவை இடம்பெறாது என்று தெரிகிறது.
* அறிக்கை லீக் ஆகி விட்டது; அதில் ஒன்றுமில்லை என்று தெரிவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

ரபேல் ஒப்பந்தம் பற்றி தினந்தோறும் பொய்:
ரபேல் ஒப்பந்தம் செய்யப்பட்டபோது நிதித்துறை செயலாளராக இருந்த ராஜீவ் மெஹ்ரிஷிதான் தற்போது மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியாக(சிஏஜி) உள்ளார். ரபேல் ஒப்பந்தம் பற்றி இவர் தாக்கல் செய்யும் அறிக்கை உண்மையாக இருக்காது, அரசுக்கு சாதகமாகவே இருக்கும் என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, ‘‘மூழ்கும் வம்சத்தை காப்பற்ற இன்னும் எத்தனை பொய்கள் தேவை’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது:
ரபேல் ஒப்பந்தத்தில் மக்கள் பணம் ஆயிரக்கணக்கான கோடி மிச்சப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இது பற்றி தினந்தோறும் பொய்கள் கூறப்படுகின்றன.  சமீபத்திய பொய், தற்போதைய மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி(சிஏஜி) பற்றியது.  இவர் கடந்த 2014-15ம் ஆண்டு நிதித்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள பொருளாதார விவகாரத்துறை செயலாளராக இருந்தார்.

ரபேல் ஒப்பந்தம் தொடர்பான எந்த ஆவணங்களும் அவரிடம் செல்லவில்லை. இந்த ஒப்பந்த முடிவில், அவருக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த தொடர்பும் கிடையாது. கொள்முதல் செலவினங்களுக்கெல்லாம்,  செலவினப்பிரிவு செயலாளர்தான் அனுமதி வழங்க வேண்டும்.
பிறகு ஏன் அவர் பற்றி பொய் கூற வேண்டும். ரூ.500 கோடிக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்ட விமானம் ரூ.1600 கோடிக்கு வாங்கப்படுகிறது என்ற குழந்தை தனமான விவாதம் எல்லாம் கட்டுக்கதை என்பது இந்த வாரிசுக்கு (ராகுல்) தெரியும். சிஏஜி அறிக்கை தகவல் வெளியாகும் முன்பே, சிஏஜி மீது தாக்குதல் தொடங்கப்பட்டுள்ளது. ரபேல் ஒப்பந்தம் தொடர்பான ரிட் மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்த போதும் இந்த வாரிசும், அவரது நண்பர்களும் திட்டினர். ரபேல் ஒப்பந்தத்தில் தனியார் நிறுவனத்துக்கு ₹30 ஆயிரம் கோடி உதவி என்பதும் இல்லாத விஷயம். இந்த ஒப்பந்தம் தொடர்பாக செய்தி தாள் ஒன்றில், ஒரு அறிக்கையின் சிறு பகுதி வெளியிடப்பட்டதும் வரலாற்றில் இதற்கு முன் நடைபெறாத சம்பவம். இவ்வாறு அருண் ஜெட்லி குறிப்பிட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : CAG ,Lok Sabha ,fighter ,Rape , Rafael Fighter Flight Agreement, Lok Sabha, CAG Report, Opposition
× RELATED மக்களவை தேர்தலுக்கான அதிமுக தேர்தல்...