×

மரக்காணம் பக்கிங்காம் கால்வாய் பகுதியில் குவிந்து வரும் வெளிநாட்டு பறவைகள் : சரணாலயமாக மாற்றும் பணிகள் தீவிரம்

மரக்காணம்: மரக்காணம் பகுதியில் கந்தாடு, வடஅகரம், வண்டிப்பாளையம், தேவிகுளம், பாலக்காடு, ஆத்திக்குப்பம், அனுமந்தை, கூனிமேடு, ஊரணி உள்பட 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இப்பகுதியில் ஏரிகள், குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் அதிகளவில் இருக்கின்றது. இந்த நீர்நிலைகள் அனைத்தும் பருவ மழையின் போது நிரம்பிவிடும். இதுபோல் இங்கு சுமார் 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பக்கிங்காம் கால்வாயில் சதுப்பு நிலங்களும் அமைந்துள்ளது. இந்த கால்வாயில் ஆண்டு முழுக்க தண்ணீர் நிரம்பி இருக்கும். இதனால் பருவ காலமாற்றத்தின் காரணமாக இலங்கை, சீனா, பாகிஸ்தான், ரஷியா போன்ற நாடுகளில் இருந்து ஆண்டுதோறும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்வேறு இனங்களை சேர்ந்த பறவைகள் இப்பகுதிக்கு வரும்.

இதுபோல் வரும் பறவை இனங்கள் இங்குள்ள நீர்நிலைகளில் கிடைக்கும் மீன், நண்டு, இறால் போன்ற உணவுகளை தின்று திறந்தவெளியில் சுற்றித்திரியும். மேலும் இந்த பறவைகள் இப்பகுதியிலேயே கூடுகள் கட்டி இனப்பெருக்கமும் செய்யும்.  இங்கு பல ஆயிரக்கணக்கான பறவைகள் திறந்தவெளியில் சுற்றி
திரிவதை பார்க்க வெளியிடங்களில் இருந்தும் பொது மக்கள் கூட்டம், கூட்டமாக இங்கு வருவார்கள். இதனால் இப்பகுதியை பறவைகள் சரணாலயமாக அமைக்க அரசும் உரிய ஏற்பாடுகளை செய்து வருகிறது. இங்கு இனப்பெருக்கம் செய்து சுற்றி திரியும் வெளிநாட்டு பறவைகள் கோடை காலத்தில் மீண்டும் தங்களது நாடுகளுக்கே சென்றுவிடும். இதனால் இப்பகுதியை பறவைகள் சரணாலயமாக அறிவிக்க வேண்டும் என்று பொது மக்கள், அரசியல் கட்சியினர் கோரிக்கை வைத்ததால் இங்கு பறவைகள் சரணாலயம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு அதிகாரிகளும் கூறினர்.    

இதனைத்தொடர்ந்து பக்கிங்காம் கால்வாய் பகுதியில் கடந்த 4 ஆண்டுக்கு முன் பல லட்சம் மதிப்பில் வனத்துறை சார்பில் மாங்குரோவ் செடிகள், கருவேல மரங்களை நட்டனர். இந்த மரங்களும் தற்போது வளர்ந்து காடுகள் போல் உள்ளது. இப்பகுதியில் நத்தக்குத்தி, கூழக்கடா, செந்நாரை உள்ளிட்ட பல்வேறு இனங்களைச் சேர்ந்த வெளிநாட்டு பறவைகள் தற்போது அதிகளவில் வந்து குவிந்துள்ளது. இதுபோல் வரும் பறவைகள் இங்கு குறைந்து மூன்று மாதங்கள் வரையில் தங்கி இனப்பெருக்கம் செய்யும். ஆனால் இந்த ஆண்டு போதிய பருவ மழை பெய்யவில்லை. இதனால் ஏரிகள் உள்ளிட்ட நீர் நிலைகளில் குறைந்த அளவில்தான் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இங்கு நீர்நிலைகள் உடனடியாக வறண்டு விட்டால் இந்த பறவைகள் வேடந்தாங்கல் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று விடும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர். 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Marakana ,Buckingham Canal , Maroon, foreign birds, sanctuary
× RELATED திடீர் தீ விபத்தில் 10 ஏக்கர்...