×

கடமலை - மயிலை ஒன்றியத்தில் சரிந்தது தேங்காய் விலை : விவசாயிகள் கவலை

வருசநாடு: கடமலை - மயிலை ஒன்றியத்தில் தேங்காய் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருசநாடு போன்ற பகுதிகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் உள்ளன. இங்கு கடந்த சில நாட்களாக தேங்காய் விலை குறைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்குள்ளாகியுள்ளனர். கடந்த மாதம் 17 ரூபாயிலிருந்து 20 ரூபாய் வரை தேங்காய் விலை இருந்தது. ஆனால் தற்போது 12 ரூபாயில் இருந்து 13 ரூபாயாக விலை குறைந்துள்ளது.

மேலும் கொப்பரை தேங்காய் சென்ற மாதம் டன் ஒன்றுக்கு 37 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. தற்போது டன் ஒன்றுக்கு 27 ஆயிரம் முதல் 28 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகிறது. இதனால் பெருத்த நஷ்டம் ஏற்பட்டு வருவதாக விவசாயிகள் கண்ணீர் விடுகின்றனர். இந்நிலையில் காங்கேயம், ஒட்டன்சத்திரம் திருப்பூர் ,சென்னை போன்ற இடங்களுக்கு தேங்காய் கிலோ ஒன்றுக்கு 99 முதல் 100 ரூபாய் வரை விலை போகிறது. இதை கடமலைக்குண்டு பகுதிக்கு வந்து சில்லரை வியாபாரிகளும், மொத்த வியாபாரிகளும் வாங்கி செல்வது வழக்கமாக உள்ளது.

இதனால் ஒவ்வொரு நாளும் தேங்காய் விலை குறைந்து வருவதால் மரங்களுக்கு செய்யவேண்டிய செலவுகளுக்கும் விலைக்கும் சமமாக உள்ளது என விவசாயிகள் கூறுகின்றனர். இதனால் தென்னை மரங்களை வெட்டி விட்டு வேறு விவசாயத்திற்கு மாறு உள்ளதாக சில விவசாயிகள் கூறினர்.
இதுகுறித்து தென்னை விவசாயி வருசநாடு ரமேஷ் கூறுகையில்,`` கடந்த சில நாட்களாக எங்கள் பகுதியில் போதிய மழை இல்லை. இதனால் தென்னை மரங்கள் தண்ணீர் பற்றாக்குறையில் உள்ளது. இதற்கு வட்டிக்கு வாங்கி நாங்கள் ஆழ்துளை கிணறு அமைத்து வருகிறோம். அதிலும் நீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. எனவே, தென்னை விவசாயிகளை காப்பதற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும். இல்லையென்றால் கடமலை  மயிலை ஒன்றியத்தில் உள்ள அனைத்து தென்னை விவசாயம் அழிந்து விடும் சூழல் உள்ளது’’ என்று கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : varusanadu, coconut, farmers
× RELATED ஊட்டிக்கு டிரைவராக சென்றவர் பஸ்சில் சடலமாக திரும்பினார்