×

பர்கூர் அருகே எருதாட்டத்தில் சீறிப்பாய்ந்த காளைகள் : தள்ளுமுள்ளுவால் 10 பேர் காயம்

கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே சத்தலப்பள்ளி கிராமத்தில் நடந்த எருதாட்டத்தில் பங்கேற்ற காளைகள் சீறிப்பாய்ந்து சென்றன. காளைகளை உற்சாகப்படுத்தும் போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் 10 பேர் காயமடைந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த சத்தலப்பள்ளி கிராமத்தில் 30ம் ஆண்டாக எருதாட்டம் நேற்று நடந்தது. விழாவின்போது காளை மாடுகளை ஒரு மந்தையில் ஓடவிட்டு, எந்த காளை குறிப்பிட்ட தூரத்தை விரைவாக கடக்கிறதோ, அந்த காளையின் உரிமையாளருக்கு பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, கிருஷ்ணகிரி, வேலூர் மாவட்டம் மற்றும் ஆந்திரா மாநிலத்தில் இருந்து சுமார் 250 காளைகள் பங்கேற்றன. இதையடுத்து, விழாவில் ஓடிய காளைகளுக்கு மொத்தம் 25 பரிசுகள் வழங்கப்பட்டது. வேலூர் மாவட்டம் கட்டேரியைச் சேர்ந்த கருப்பன் காளைக்கு முதல் பரிசாக 55,555 வழங்கப்பட்டது. 2ம் பரிசாக பிஆர்ஜி மாதேப்பள்ளியைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரது காளைக்கு 44,444 மற்றும் 3ம் பரிசாக பி.கொத்தூரைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவரது காளைக்கு 33,333 வழங்கப்பட்டது.

அதேபோல், நான்காம் பரிசாக 22,222, 5ம் பரிசாக 19,999 என மொத்தம் 25 காளைகளின் உரிமையாளர்களுக்கு 3 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டது. மைதானத்தில் திமிறிக்கொண்டு ஓடிய காளைகளை உற்சாகப்படுத்துவதற்காக குவிந்த இளைஞர்களிடையே, திடீரென தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில், ஒருவர் மீது ஒருவர் விழுந்ததில் 10 பேர் லேசான காயமடைந்தனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Krishnagiri, Bargur, Bulls
× RELATED ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நடைபெற்ற...