×

பிகானேர் நில முறைகேடு வழக்கு தாயாருடன் ராபர்ட் வதேரா அமலாக்க துறையிடம் ஆஜர்

ஜெய்ப்பூர்: பிகானேர் நில முறைகேடு வழக்கு தொடர்பாக ராபர்ட் வதேரா, அவரது தாயாருடன் ஜெய்ப்பூரில் அமலாக்கத் துறையிடம் இன்று ஆஜராக உள்ளார். முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கு சொந்தமானதாக கூறப்படும் ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனம்,  ராஜஸ்தானின் பிகானேர் பகுதியில் பல ஏக்கர் நிலத்தை மிகக் குறைந்த விலைக்கு வாங்கியது. வேறு நபர்களுக்கு ஒதுக்கப்பட்ட இந்த நிலம், போலி ஆவணம்  மூலமாக குறைந்த விலைக்கு முறைகேடாக வாங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத்தொடர்ந்து, சட்ட விரோத பணபரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ்  அமலாக்கத் துறை கடந்த 2015ல் வழக்கு பதிவு செய்தது.

 வதேராவுக்கு நெருக்கமானவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் வதேராவின் பெயர் சேர்க்கப்படவில்லை. ஆனாலும், அவருக்கு சொந்தமான நிறுவனம்  சம்மந்தப்பட்டு இருப்பதால், இதில் வதேராவை விசாரிக்க அமலாக்கத் துறை 3 முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. அமலாக்கத் துறை  விசாரணைக்கு வதேரா ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பி  உள்ளது. இதன்படி, அவர் ஜெய்ப்பூரில் அமலாக்கத் துறை முன்பாக இன்று காலை 10 மணிக்கு ஆஜராக இருப்பதாக அதிகாரிகள் கூறி உள்ளார். அப்போது  வதேராவின் தாயார் மவுரீனும் ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரியங்கா பற்றி உருகிய வதேரா: காங்கிரஸ் பொதுச் செயலாளர் பதவியேற்ற பிரியங்கா காந்தி நேற்று முதல் முறையாக உபியில் பேரணி மேற்கொண்டார்.  தொண்டர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இப்பேரணி குறித்து வதேரா தனது பேஸ்புக்கில் உருக்கமான பதிவை வெளியிட்டார். அதில், ‘‘உபியில்  புதிய பயணத்தை தொடங்கியிருக்கும் பிரியங்காவுக்கு வாழ்த்துக்கள். எனது சிறந்த தோழி, நிறைவான மனைவி, என் குழந்தைகளுக்கு சிறந்த அம்மா...  பழிவாங்கும் தீய அரசியல் சூழல் தற்போது நிலவுகிறது. ஆனாலும், இந்திய மக்களுக்கு அவர் சேவை செய்ய வேண்டியது அவரது கடமை என்பதை அறிவேன்.  அவரை இப்போது இந்திய மக்களுக்கு அர்ப்பணித்துள்ளோம். தயவுசெய்து அவரை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளுங்கள்’’ எனக் கூறி உள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Bikaner ,enforcement department ,Robert Vadra , Bikaner land scam case, Robert Vadra, Department of Implementation,
× RELATED முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி...