×

விதிமீறல் கட்டிடங்களுக்கு சீல் வைக்க எதிர்ப்பு: கொடைக்கானலில் முழு கடையடைப்பு

கொடைக்கானல்:  விதிமீறல் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கொடைக்கானலில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது.  கடைகள், ஓட்டல்கள், விடுதிகள் அடைக்கப்பட்டிருந்ததால் சுற்றுலாப்பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில்  விதிமுறைகளை மீறி, அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள 1,415 கட்டிடங்களை மூடி சீல் வைக்குமாறு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டது. மேலும் விதிமீறல்கள்  குறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கொடைக்கானல் நகராட்சி ஆணையாளருக்கு உத்தரவிட்டது. இதையடுத்து விதிமீறல் கட்டிடங்களை கணக்கெடுக்கும்  பணியில் நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு விடுதி உரிமையாளர்கள், ஓட்டல் உரிமையாளர்கள், டாக்சி உரிமையாளர்கள், சிறு  வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

விதிமீறல் கட்டிடங்களுக்கு அபராதம் விதித்து, அவற்றை வரைமுறைப்படுத்த வலியுறுத்தி விடுதி உரிமையாளர்கள் உள்ளிட்ட சங்கத்தினர் நேற்று கடையடைப்பு  போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சிறு வியாபாரிகள் உள்பட பல்வேறு சங்கத்தினர் ஆதரவு தெரிவித்திருந்தனர். இதனால் கொடைக்கானலில் நேற்று  ஓட்டல்கள், விடுதிகள் முதல் சிறு கடைகள் வரை முழுவதுமாக அடைக்கப்பட்டிருந்தன. வாடகை வாகனங்களும் இயங்கவில்லை. இந்த திடீர் கடையடைப்பு  மற்றும் வேலைநிறுத்த போராட்டத்தினால், கொடைக்கானல் வந்த சுற்றுலாப்பயணிகள் உணவு, குழந்தைகளுக்கு பால் உள்ளிட்ட அத்யாவசிய பொருட்கள்  கிடைக்காமல் கடும் அவதிக்குள்ளாகினர்.

சாகும்வரை உண்ணாவிரதம்: ஓட்டல் மற்றும் விடுதி உரிமையாளர்கள் சங்க செயலாளர் அப்துல் கனிராஜா கூறுகையில், ‘‘1,415 அனுமதியற்ற கட்டிடங்களை  மூடினால் ஒரு சுற்றுலாப்பயணிகள் கூட கொடைக்கானலில் தங்க முடியாது. 40 ஆயிரம் ஊழியர்கள் வேலையிழந்துள்ளனர். தமிழக அரசு தலையிட்டு  கொடைக்கானலில் உள்ள கட்டிடங்களை வரைமுறைப்படுத்த வேண்டும். சீல் வைக்கும் நடவடிக்கைகளை முதல்வர், துணை முதல்வர் தடுத்து நிறுத்தி எங்களை  காப்பாற்ற வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் அனைவரும் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பதைத் தவிர வேறு வழியில்லை’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Infringement Buildings: Complete Stamping ,Kodaikanam , Infringement Buildings, Seal, Kodaikanal, Complete Bartender
× RELATED கொடைக்கானலில் பூக்க துவங்கியது காப்பி