×
Saravana Stores

சாரதா சிட்பண்ட் வழக்கு சிபிஐ விசாரணையை கண்காணிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

புதுடெல்லி: சாரதா சிட் பண்ட் ஊழல் வழக்கில், சிபிஐ விசாரணையை கண்காணிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. மேற்கு வங்கத்தில் நடந்த சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கு தொடர்பான விசாரணையில் ஆஜராக   கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாருக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ வழக்கு தொடர்ந்தது. அதில், ‘‘சாரதா சிட் பண்ட், ரோஸ் வேலி மற்றும் டவர் குரூப் நிறுவனங்கள் திரிணாமுல் காங்கிரஸ்  கட்சிக்கு அதிகளவில் நன்கொடை வழங்கியுள்ளன. வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டபோது, ராஜிவ் குமார் கைப்பற்றிய ஹார்டு டிஸ்க் உட்பட இதர ஆவணங்கள் ஒப்படைக்கப்படவில்லை’’ என கூறியிருந்தது.  இதை  விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘சிபிஐ விசாரணைக்கு ராஜீவ் குமார் ஆஜராகி உண்மையாக பதில் அளிக்க வேண்டும். ஆனால், அவரை சிபிஐ கைது செய்யக் கூடாது’ என உத்தரவிட்டது. இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக  3 நாட்களாக நடத்தி வந்த தர்ணா போராட்டத்தை மேற்குவங்க முதல்வர் மம்தா வாபஸ் பெற்றார்.இந்நிலையில் இந்த விசாரணையை உச்ச நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் முதலீட்டாளர்கள் சிலர்  தாக்கல் செய்தனர். இந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘‘இந்த வழக்கில் கண்காணிப்பு குழு  அமைக்கும் எண்ணம் இல்லை’’ என்றனர்.

3 வது நாளாக விசாரணை
மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் உள்ள சிபிஐ  அலுவலகத்தில் விசாரணைக்காக ராஜீவ் குமார் கடந்த 9ம் தேதி காலை 11 மணிக்கு   ஆஜரானார். அவரிடம் டெல்லியில் இருந்து வந்த 3 சிபிஐ அதிகாரிகள், நீண்ட  நேரம்  விசாரணை நடத்தினர்.  அவரிடம் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து விசாரணை  நடத்தப்படுகிறது. திரிணாமுல் எம்.பி குணால் கோஷிடமும் சிபிஐ கடந்த 2 நாட்களாக விசாரணை  நடத்தியது. இருவரிடமும் நேற்று  தனித்தனியாகவும், கூட்டாகவும் சுமார் 8 மணி நேரம் நீண்ட விசாரணை நடத்தப்பட்டது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Supreme Court ,CBI ,Saradha , Supreme Court, monitor CBI probe, Saradha scam case
× RELATED நீதிதேவதை சிலையில் மாற்றம் செய்ய...