×

சாதுவாக மாறிவிட்டதால் காட்டுக்குள் அனுப்புவது சிரமமானது சின்னதம்பி யானையை முகாமில் பராமரிக்க முடிவு: உயர் நீதிமன்றத்தில் வனத்துறை தகவல்

சென்னை: சாதுவாக மாறிவிட்டதால் சின்னதம்பி யானையை பிடித்து முகாமில் அடைப்பதை தவிர வேறு வழியில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக வனத்துறை தெரிவித்துள்ளது.  திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் உள்ள கிராமங்களில் சுற்றி வரும் சின்னத்தம்பி யானை அங்குள்ள பயிர்களை நாசம் செய்து வருகிறது. இதையடுத்து யானையை மயக்க மருந்து செலுத்தி பிடித்த வனத்துறையினர் அதை காட்டுக்குள் விட்டனர். ஆனால், அந்த யானை மீண்டும் உடுமலை பகுதிக்கே வந்துவிட்டது.  இந்நிலையில், சின்னதம்பி யானை கும்கியாக மாற்றப்படும் என்று வனத்துறை அமைச்சர் தெரிவித்தார். இதையடுத்து, சின்னத்தம்பி யானையை கும்கியாக மாற்றத்  தடை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, சின்னத்தம்பி யானையை கும்கியாக மாற்றும் எண்ணம் இல்லை என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், யானையால் கடுமையான பயிர்சேதம் ஏற்பட்டுள்ளது. எனவே, அதை பிடித்து முகாமில் வைத்து பராமரிக்க உத்தரவிட கோரி பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் ஆகியோர் சின்னத்தம்பி யானையின் தற்போதைய நிலை என்ன. எங்கெல்லாம் சுற்றிவருகிறது என்று கேள்வி எழுப்பினர்.  வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், பத்திரிக்கை செய்திகளை பார்க்கும் போது சின்னதம்பி யானை  கடந்த சில நாட்களாக காட்டு யானை போல் செயல்படவில்லை என்று தெரிவித்தனர். அப்போது, தலைமை வனக்காப்பாளர் சஞ்சய் குமார் வாத்சவா சார்பில் வனத்துறை வக்கீல் ஒரு அறிக்கையை தாக்கல் செய்தார்.

அதில், சின்னத்தம்பி யானையை காட்டுக்கு அனுப்ப தொடர்ந்து முயற்சி செய்து வந்தோம். ஆனால், அந்த யானை மீண்டும் ஊருக்குள் நுழைந்து விடுகிறது.  தற்போது அந்த யானை மிகவும் சாதுவாக மாறிவிட்டதால் காட்டுக்குள் திருப்பி அனுப்புவது சிரமமானது என்று யானைகள் நிபுணர் அஜய் தேசாஜி அறிக்கை அளித்துள்ளார். அந்த அறிக்கையின் அடிப்படையில் யானையை பிடித்து முகாமில் பாதுகாத்து பாரமரிக்க அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : woods ,elephant camp ,Chinnambi , Chinnathambi Elephant, High Court
× RELATED குன்னூர் – மேட்டுப்பாளையம்...