×

சென்னை அண்ணாசாலையில் உள்ள டாஸ்மாக் அதிகாரி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை: 2.40 லட்சம் பறிமுதல்

சென்னை: சென்னை அண்ணாசாலையில் டாஸ்மாக் சென்னை முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புதுறை போலீசார் நேற்று சோதனை நடத்தினர். இதில் 2.40 லட்சம் மற்றும் ஆவணம் பறிமுதல் செய்யப்பட்டது.   சென்னை அண்ணாசாலையில் எல்.எல்.ஏ கட்டிடத்தின் 4வது மாடியில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் நிறுவனத்தின், முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு சென்னை கோட்ட முதுநிலை மண்டல மேலாளராக இருப்பவர் முத்துக்குமாரசாமி. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்கள் இவருக்கு கீழ் வருகிறது. இதேபோல், 9 மாவட்ட மேலாளர்கள் இவருக்கு கீழ் பணியாற்றி வருகின்றனர்.  இந்தநிலையில், ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமை டாஸ்மாக் ஊழியர்கள் தங்களின் கோரிக்கைகள் குறித்து முதுநிலை மண்டல மேலாளரை சந்திப்பது வழக்கம்.

இந்தநிலையில் நேற்று மதியம் 1.30 மணியளவில் முத்துக்குமாரசாமியின் அலுவலகத்திற்குள் கோரிக்கைகள் குறித்து பேச டாஸ்மாக் ஊழியர்கள் பலர் இருந்தனர். அப்போது, டாஸ்மாக் ஊழியர்கள் போல் இருந்த லஞ்ச ஒழிப்புதுறை போலீசார் திடீரென அங்கிருந்த ஊழியர்கள் அனைவரையும் தனித்தனியாக அழைத்து சென்றனர். பின்னர், முதுநிலை மண்டல மேலாளர் முத்துக்குமாரசாமியிடம் தாங்கள் லஞ்ச ஒழிப்புதுறை போலீசார் என்று கூறி விசாரணையை நடத்தினர். லஞ்சம், பணியிடமாறுதல் நியமனத்தில் முறைகேடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் இவர் மீது தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் வந்தது. இதனையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அலுவலகம் முழுவதும் தேடுதல் வேட்டை நடத்தினர்.

இந்த சோதனையில் கணக்கில் வராத சுமார் 2.40 லட்சம் மற்றும் ஆவணம் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் போல் இருந்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தியதால் அங்கிருந்த நிஜ ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏற்கனவே கடந்த வருடம் மார்ச் மாதம் இதே அலுவலகத்தில் முதுநிலை மண்டல மேலாளராக பணியாற்றிய குணசேகரன் என்பவர் டாஸ்மாக் ஊழியர் ஒருவரிடம் இருந்து பணியிட மாறுதலுக்காக 20 ஆயிரம் லஞ்சம் பெறும் போது கையும் களவுமாக மாட்டிக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Taskmaker ,Chennai Annalsalai , Chennai Annasalai, Tasmak, confiscated
× RELATED கோவை டாஸ்மாக் பார் கொலையில் 4 பேர்...