×

சின்னத்தம்பி யானையை பிடித்து முகாமில் வைப்பதை தவிர வேறு வழியில்லை : உயர்நீதிமன்றத்தில் வனத்துறை பதில்

சென்னை: சின்னத்தம்பி யானையை பிடித்து முகாமில் வைப்பதை தவிர வேறு வழியில்லை என்று வனத்துறை கூறியுள்ளது. சின்னத்தம்பி யானையை மீண்டும் காட்டுக்குள் திருப்பி அனுப்புவதில் சிரமம் உள்ளதாக வனத்துறை கூறியுள்ளது. காட்டிற்குள் அனுப்ப முயற்சித்தும் அது மீண்டும் ஊருக்குள் நுழைந்து விடுகிறது என்று சின்னத்தம்பி யானையை கும்கியாக்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில் வனத்துறை இவ்வாறு பதில் அளித்துள்ளது.

யார் அந்த சின்னத்தம்பி யானை ??

கோவை தடாகம் பகுதியில் சுற்றித்திரிந்த சின்னத்தம்பி காட்டுயானையை வனத்துறையினர் கடந்த 25-ம் தேதி மயக்க ஊசி செலுத்திப் பிடித்தனர். பிடிபட்ட யானையின் கழுத்தில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தி பொள்ளாச்சி டாப்சிலிப் பகுதியில் உள்ள வரகளியாறு வனப்பகுதியில் விட்டனர். ஆனால் சின்னத்தம்பி யானை மீண்டும் தான் இருந்த பகுதிக்கே திரும்பியது. இதையடுத்து, அந்த யானையை கும்கியாக மாற்ற முயற்சிப்பதாக தகவல்கள் பரவின. அதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இது தொடர்பாக அருண் பிரசன்னா என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மணிகுமார் மற்றும் சுப்பிரமணிய பிரசாத் அமர்வு, சின்னத்தம்பி யானையை கும்கியாக மாற்றக்கூடாது எனவும், மேலும் அதனை துன்புறுத்தாமல் பத்திரமாக காட்டுக்குள் அனுப்பிவைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

வனத்துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

இதையடுத்து சின்னத்தம்பி யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் அனுப்ப வனத்துறையினர் முயன்று வருகின்றனர். இந்த நிலையில், விலங்குநல ஆர்வலர் முரளிதரன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில் தடாகம் பகுதியில் யானை வழித்தடத்திற்கு இடையூறாக இருக்கக்கூடிய செங்கல் சூளைகளை அகற்ற வேண்டும் என்றும், சின்னத்தம்பி யானையால் அங்குள்ள பயிர்கள் சேதமடைந்து வருவதாகவும், எனவே யானையை முகாமுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் எனவும் வழக்கில் கேட்டுக்கொண்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சின்னதம்பி யானை நடமாட்டம் குறித்து அறிக்கை தர தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும் யானையின் நடமாட்டத்தை வரும் 10ம் தேதி வரை கண்காணித்து 11ம் தேதிக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

யானையை முகாமில் அடைப்பதை தவிர வேறு வழியில்லை

இந்நிலையில் இன்றைய வழக்கு விசாரணையின் போது, உயர்நீதிமன்றத்தில் வனத்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் தலைமை வனப்பாதுகாவலர் கூறியுள்ளதாவது,சின்னத்தம்பி யானையை பிடித்து முகாமில் அடைப்பதை தவிர வேறு வழியில்லை, சின்னத்தம்பி யானையை மிகவும் சாதுவாக மாறிவிட்டதால் மீண்டும் அதனை காட்டுக்குள் திருப்பி அனுப்புவதில் சிரமம் உள்ளது, காட்டிற்குள் அனுப்ப முயற்சித்தும் யானை  மீண்டும் ஊருக்குள் நுழைந்து விடுகிறது. வனத்துறை அதிகாரிகள் மற்றும் அதிகாரிகளின் கருத்தின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. யானைகள் நிபுணர் அளித்த அறிக்கையின் படி சின்னத்தம்பி யானையை முகாமில் வைத்து பாதுக்காக்க உள்ளோம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து காட்டு யானை போல் சின்னத்தம்பி செயல்படவில்லை என்பது செய்திகளை பார்க்கும் போது தெரிகிறது என்று கூறிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chinnathampi ,camp ,High Court ,Forest Department , Coimbatore, Sinnathambi, Forests, tapcilip, Forests, warrants
× RELATED அரசு பேருந்துகளின் வகையை...