×

சேலம் மாநகர், மாவட்ட பகுதியில் சந்து கடைகளில் மது விற்பனை படுஜோர்

சேலம்: சேலம் மாநகர் மற்றும் மாவட்ட பகுதியில் சந்து கடைகளில் மதுவிற்பனை களை கட்டியிருக்கிறது. தினசரி மாமுல் என காவல்துறை அதிகாரிகள் கல்லா கட்டி வருகின்றனர். டாஸ்மாக் மதுபான கடைகளை அரசே நடத்தும் நிலையில், கள்ளச்சாராய விற்பனையை தடுக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதில், மலைப்பகுதிகளில் காய்ச்சி, ஊருக்குள் கடத்தி வந்து விற்பனை செய்யும் கள்ளச்சாராய வியாபாரிகளை கைது செய்கின்றனர். இந்த வகையிலான கள்ளச்சாராயம் தடுக்கப்பட்டு வரும் நிலையில், அரசு மதுபானங்கள், கடைகள் பூட்டப்பட்டபின் ஆங்காங்கே அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் நிலை மாநிலம் முழுவதும் அதிகரித்துள்ளது. டாஸ்மாக் மதுக்கடைகளை குறைக்கும் நோக்கில் அரசு தரப்பில் படிப்படியாக கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில், அது இயங்கும் நேரமும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மதியம் 12 மணிக்கு திறந்து இரவு 10 மணிக்கு மூடப்படுகிறது.

இந்த நேர குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட பின், ஆளும் தரப்பை சேர்ந்தவர்கள், பல இடங்களில் சந்து கடைகளை திறந்து, எவ்வித அச்சமும் இன்றி 24 மணி நேரமும் டாஸ்மாக் மதுபானங்களை அதிக விலைக்கு விற்று வருகின்றனர். இதற்கு போலீசார் துணை நிற்கின்றனர் என்பது தான் மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது. சேலம் ஜாகீர்அம்மாபாளையம் பகுதியில், எந்த நேரமும் சந்துகடைகளில் மதுபானங்கள் விற்கப்படுவதால், அப்பகுதி மக்கள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகினர். சாலையில் பெண்களால் நடந்து செல்ல முடியவில்லை. குடிபோதையில் ஆசாமிகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்தது. இதனால், ஒரு கட்டத்தில் ஆவேசமடைந்த அப்பகுதி மக்கள் 500க்கும் மேற்பட்டோர், பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் திரண்டு மறியல் செய்தனர்.

இந்த மறியல் போராட்டத்தை அடுத்து, அந்த பகுதியில் மதுவிற்பனையில் ஈடுபட்டு வந்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து சுமார் 1200 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மக்களின் ஆவேசத்திற்கு பின் நடவடிக்கை எடுக்கும் போலீசார், இதுநாள் வரை என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதே மதுஎதிர்பாளர்களின் கேள்வியாக உள்ளது. சேலம் மாநகரில் சூரமங்கலம், அழகாபுரம், அஸ்தம்பட்டி, பொன்னம்மாபேட்டை, அம்மாபேட்டை, சன்னியாசிகுண்டு, கிச்சிப்பாளையம், செவ்வாய்பேட்டை, டவுன், அன்னதானப்பட்டி, தாதகாப்பட்டி, கொண்டலாம்பட்டி என அனைத்து இடங்களிலும் 150க்கும் மேற்பட்டோர் ரகசியமாக சந்து கடைகளை நடத்தி வருகின்றனர். இவர்கள் ஆளும் அதிமுக நிர்வாகிகளின் உறுதுணையோடு, போலீசாருக்கு “வைட்டமின் ப’’வை கொடுத்து விட்டு சந்து கடைகளை நடத்துகின்றனர்.

தினசரி மாமூல், மாத மாமூல் என போலீஸ் அதிகாரிகளுக்கு கைநிறைய அள்ளிக்கொடுப்பதால், யாரும் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர். ஆனால், இந்த விவகாரத்தை பற்றி உயர் போலீஸ் அதிகாரிகள் கேள்வி கேட்டுவிடக்கூடாது என்பதற்காக தினமும் 4 மதுபாட்டில், 5 மதுபாட்டில் கையில் வைத்திருந்ததாக 10 முதல் 15 வழக்குகளை பதிவு செய்கின்றனர். மாநகர மதுவிலக்கு போலீசாரும், இத்தகைய வழக்குகளை தான் பதிவு செய்கின்றனர். சந்து கடைகள் நடத்தி மக்களுக்கு தொல்லை கொடுக்கும் நபர்களை பிடித்து சிறையில் அடைக்காமல் இருக்கின்றனர். கடந்த ஆண்டில், பொன்னம்மாபேட்டை பகுதியில் சந்து கடையால் கடும் அவதியடைகிறோம் என சாலை மறியல் செய்தபின், அந்த பகுதியில் 2 பேரை கைது செய்து, குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்தனர். அதன்பின் தற்போது, சூரமங்கலத்தில் மக்கள் மறியலில் ஈடுபட்ட பின், அந்த பகுதியில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மற்றபடி இதர பகுதிகளில் தற்போதும், சந்து கடைகளில் மதுவிற்பனை படுஜோராக தான் நடந்து வருகிறது என்பது மக்களின் குற்றாட்டாகும்.

சேலம் மாவட்டத்தை பொருத்தவரை பேளூர், காரிப்பட்டி, வாழப்பாடி, ஆத்தூர், கெங்கவல்லி, வீரகனூர், தலைவாசல், சங்ககிரி, மேட்டூர், இடைப்பாடி, ஓமலூர், தாரமங்கலம் பகுதிகளில் சந்துகடைகளில் மதுவிற்பனை கனஜோராக நடந்து வருகிறது. அந்த பகுதியில் மாவட்ட போலீசார், கல்லா கட்டி வருகின்றனர்.
 இந்த சந்துகடைகளால், 24 மணி நேரமும் மது பாட்டில்கள் கிடைக்கும் நிலை தான், மாவட்டம் முழுவதும் உள்ளது. இதற்கு அரசே மதுக்கடைகளை மூடாமல் அதிகளவு திறந்து வைத்துவிடலாம் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. மாவட்ட போலீசாரும், 4 பாட்டில், 5 பாட்டில், 10 பாட்டில் மதுபானங்களுடன் சிக்கினார்கள் என தினமும் 20க்கும் மேற்பட்ட வழக்குகளை பதிவு செய்கின்றனர். இதில், சிக்கும் நபர்களை அனைவரையும் சொந்த ஜாமீனில் விடுவிக்கின்றனர். மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர், மாவட்ட எஸ்பி தீபாகனிகர் ஆகியோர் நேரடியாக களம் இறங்கி, அனைத்து பகுதியிலும் தீவிர சோதனை நடத்தினால் மட்டும் தான், சந்து கடைகளில் மதுவிற்பனையில் ஈடுபடும் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய இயலும். அதற்கான நடவடிக்கையை அதிகாரிகள் எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : city ,Salem ,liquor shops ,lounge stores ,district area , Salem, wine, sale
× RELATED சென்னை கண்ணகி நகரில் போலீசார் மீது கஞ்சா போதை ஆசாமிகள் தாக்குதல்