×

பெரம்பலூர் அருகே காடூரில் அச்சுவெல்லம் தயாரிப்பில் விவசாயிகள் மும்முரம்

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே காடூரில் அச்சுவெல்லம் தயாரிக்கும் பணிகளில் கரும்பு விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். கரூர் மட்டுமன்றி கேரளாவுக்கும் விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர். கூட்டுறவு அங்காடிகள், ரேசன் கடைகளில் விற்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாகும். தமிழகத்தில் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களுக்கு அடுத்தபடியாக கரும்பு உற்பத்தியில் சிறந்து விளங்குவது பெராம்பலூர் மாவட்டம்தான். பெரம்பலூர் மாவட்டத்தில் மட்டுமே ஆண்டுக்கு 18 ஆயிரம் ஏக்கர் முதல் 23 ஆயிரம் ஏக்கர்வரை கரும்பு பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்படுகிறது. இவற்றை நம்பியே எறையூரில் பொதுத்துறை சர்க்கரை ஆலையும், உடும்பியத்தில் தனியார் சர்க்கரை ஆலையும் இயங்கி வருகின்றன.  

இதனை கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு அந்தந்த கரும்பு விவசாயிகள் தங்கள் வயல்களிலேயே மாடுபூட்டிய இயந்திரங்களில் கரும்பை அரைத்து பாகாகக் காய்ச்சி அச்சுவெல்லம் தயாரித்து விற்பதும், ஏற்றுமதி செய்வதும் வழக்கமாக இருந்து வந்தது. பெரம்பலூர் மாவட்டம் எறையூரில் பொதுத்துறை சர்க்கரை ஆலை தொடங்கியபிறகு, அச்சுவெல்லம் தயாரிப்புப் பணியே அற்றுப்போய் அதிசயிக்கும் பணியாகமாறி விட்டது. சர்க்கரைப் பயன்பாடு அதி ரித்து, வெல்லத்திற்கு மவுசு குறைந்து போனதால் அச்சுவெல்லம் தயாரிப்பு பணிகளும் மந்தமானது. இந்நிலையில் பெராம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியம் காடூரில் இன்றளவும் அச்சுவெல்லம் தயாரிக்கும்பணி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.  

அதற்கு முக்கிய காரணம் காடூர் கிராமத்தில் மட்டுமே 500 ஏக்கருக்கு மேல் கரும்பு பயிரிடப்பட்டு வருவதுதான். இக்கிராமத்தில் தங்கவேல், சங்கர், கருணாகரன், மணிவேல் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் தற்போதும் தங்கள் வயல்களில் கொட்டகை அமைத்து, கரும்புச்சாரில் பாகு காய்த்து அச்சுவெல்லம் தயாரித்து, வெளியூர்களுக்கு அனுப்பி வருகின்றனர். இதற்காக பழனி அருகேயுள்ள உடுமலைப்பேட்டை பள்ளப் பாளையம் பகுதியைச் சேர்ந்த அச்சுவெல்லம் தயாரிப்பதில் கைதேர்ந்தவர்கள் முகாமிட்டு தயாரித்துக் கொடுத்து வருகின்றனர்.  இதற்காக 2 ஆயிரம் லிட்டர் அளவுக்கு கரும்புச்சாறு கிடைத்தவுடன் அவற்றை அகண்ட இரும்புக் கொப்பரையில் காய்ச்சுகின்றனர். சுண்ணாம்பு அல்லது சல்பர் சேர்க்க, கரும்புச் சாற்றிலிருந்து அழுக்குகள் பொங்கிப் பொங்கி நுரைக்கும். அப்போது அவற்றை சல்லடைக் கரண்டியின் மூலம் வழித்து அகற்றி விடுவார்கள்.

பிறகு பாகு சீக்கிரம் பதமாவதற்காக வேதி உப்பு சேர்க்கப் படுகிறது. சரியானபதம் கிடைத்தவுடன் கொப்பரையைக் கவிழ்த்து, பாகினை மரப் பாத்தியில் ஊற்றிவைத்து படிப்படியாக அச்சில் வார்த்து வெல்லமாக எடுக்கின்றனர். சுமார் 2.30 மணி நேர கடுமையான உழைப்பில் அச்சுவெல்லம் தயாரிக்கப்படுகிறது. இப்பகுதியிலிருந்து கரூர், பழனி, ஈரோடு ஆகிய இடங்களில் உள்ள வெல்ல மண்டிக்கு அனுப்பப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. அச்சு வெல்லத்தை அதன் அருமைதெரிந்த கேரளாவுக்கும் அனுப்பி வருகின்றனர்.  தற்போது சர்க்கரை வியாதிக்காரர்களே சர்க்கரைக்கு மாற்றாக வீடுகளில் மட்டுமன்றி டீக்கடைகளிலும் வெல்லம் போட்ட டீ, காப்பியைக் குடிப்பதால் வெல்லத்திற்கான மவுசு அதிகரித்து வருகிறது.  இருப்பினும் மாவட்ட நிர்வாகமே அச்சு வெல்லத்தைக்கொள்முதல் செய்து, ரேசன்கடை, கூட்டுறவு அங்காடிகள் மூலமாக விற்று சந்தைப்படுத்த ஏற்பாடு செய்ய வேண்டுமென்பது விவசாயிகளின் கோரிக்கையாகும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Perambalur ,Kadur , PERAMBALUR, accuvellam farmers
× RELATED தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றி...