×

சேலம் பெரியார் பல்கலைக்கழக எம்.பில்., மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கியதில் முறைகேடு: 2 பேர் அதிரடியாக டிஸ்மிஸ்

சேலம்: சேலம்  பெரியார் பல்கலைக்கழகத்தில், சேலம் உள்பட 4 மாவட்டங்களைச் சேர்ந்த 1.25 லட்சம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதில், மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்தம் மற்றும் மதிப்பெண்  வழங்குவதில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக, அடிக்கடி புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் மதிப்பெண் வழங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக, 2 தற்காலிக பணியாளர்கள் டிஸ்மிஸ் ெசய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து பல்கலைக்கழக பணியாளர்கள் கூறியதாவது: பெரியார் பல்கலைக்கழக இணைவு பெற்ற கல்லூரிகளில் இருந்து அனுப்பப்படும் மதிப்பெண்ணுக்கும், இறுதியாக பல்கலைக்கழகத்தால் வெளியாகும் மதிப்பெண்ணுக்கும் வித்தியாசங்கள் இருப்பதாக புகார் எழுந்தது. சமீபத்தில் நாமக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் படித்த 30க்கும் மேற்பட்ட எம்.பில். மாணவர்களுக்கு, பல்கலைக்கழகத்தில் கூடுதலாக மதிப்பெண் வழங்கப்பட்டதாக, புகார் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து விசாரணை நடத்த சிண்டிகேட் உறுப்பினர் பாலசந்திரன், தேர்வாணையர் (பொ) முத்துசாமி மற்றும் ஆங்கில துறைத்தலைவர் சங்கீதா ஆகியோர் கொண்ட 3 பேர் கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த விசாரணையில், குறிப்பிட்ட மாணவர்களுக்கு, பல்கலைக்கழகத்தில் கூடுதலாக மதிப்பெண் வழங்கப்பட்ட முறைகேடு உறுதியானது. இதுதொடர்பான தொகுப்பூதிய பணியாளர் தாமஸ் இரு வாரங்களுக்கு முன்பு டிஸ்மிஸ் செய்யப்பட்டார். தொடர்ந்து, நேற்று முன்தினம், தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் சத்தியப்பிரியா பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் பெரிய அளவிலான முறைகேடுகள் நடந்திருப்பது தெரியவந்துள்ளது.  சம்பந்தப்பட்ட உயர் அலுவலர்களுக்கு தெரியாமல், தற்காலிக பணியாளர்கள் மட்டும் இத்தகைய முறைகேட்டில் ஈடுபட்டிருக்க வாய்ப்பில்லை. தொடர்புள்ள பலரை தப்பிக்க வைக்கவும், இந்த விவகாரத்தை இத்துடன் மூடி மறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பொதுவாக 3 ஆண்டுக்கு மேல் நிர்வாக பதவிகளில் இருப்பவர்களை, மாற்றம் செய்ய வேண்டும். ஆனால், தேர்வாணையர் அலுவலகத்தில் முக்கிய பொறுப்பில் உள்ள ஒருவர், கடந்த 15 ஆண்டுகளாக அதே இடத்தில் இருந்து  வருகிறார். சுயநிதி கல்லூரிகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு, பல விவகாரங்களை கையாண்டு வருகிறார். இதுவும் முறைகேடுகளுக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்து வருகிறது. எனவே, இந்த விவகாரத்தை முழுமையாக விசாரித்து, சம்பந்தப்பட்ட அனைவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
 
இதுகுறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் குழந்தைவேல் கூறுகையில், ‘புகார் வந்தவுடன், உடனடியாக கமிட்டி அமைத்து விசாரணை நடத்தப்பட்டது. முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், ஒருவர் டிஸ்மிஸ்  செய்யப்பட்டுள்ளார். மற்றொருவர் நீண்ட கால சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேற்கொண்டு விசாரணை நடத்தி, மற்றவர்கள் மீதான குற்றச்சாட்டு உறுதிசெய்யப்பட்டால், கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றார்.  பதிவாளருக்கு அடுத்த நிலையில் உள்ள அதிகாரி உள்பட 11 பேரிடம் விசாரணை கமிட்டி விசாரணை நடத்தியுள்ளது. ஆனால், விசாரணை அறிக்கை குறித்து இதுவரை யாருக்கும் தகவல் தெரிவிக்கவில்லை. மேலும்,  அதன்பின்னர் நடந்த சிண்டிகேட் கூட்டத்திலும் வைக்கவில்லை. எனவே, பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் பலர் இந்த விவகாரத்தில் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், லஞ்ச ஒழிப்பு போலீசாரும், ரகசியமாக  இதுகுறித்து விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Salem Periyar University ,Persons , Salem Periyar University, MP, Students, Score, Abuse, Dismiss
× RELATED சேலம் பெரியார் பல்கலை சிண்டிகேட்...