×

போராட்டத்தின் மூலம்தான் டாஸ்மாக் கடையை மூட முடியும்: வளர்மதி, மது எதிர்ப்பு போராளி

சென்னை: மதுக்கடைகளில் இந்த அளவுக்கு விற்பனை செய்ய வேண்டும் என்று இலக்கை வைத்து நிர்ணயிக்கும் அவ்வளவு மோசமான அரசாங்கமாகத்தான் இப்போதைய அரசு உள்ளது. பள்ளி படிக்கும் மாணவர்கள் முதல், கல்லூரி மாணவர்கள் என அனைவரும் மதுவிற்கு அடிமையாகி விட்டனர். இதனால், கடந்த காலங்களில் 100க்கு 1 நபர் என்று இருந்த நிலை தற்போது மாறி 100க்கு 99 பேர் குடிக்கின்றனர். டாஸ்மாக் கடைகளில் மது குடிப்பதும்  அடித்தட்டு மக்கள், உழைக்கும் மக்கள் தான். இவர்கள், தாங்கள் சம்பாதிக்கும் பணத்தில் பெரும்பாலும் குடிப்பதற்காக போய் விடுகிறது. அப்போது பல குடும்பங்கள் நாசமாக்கப்படுவதும், பெண்கள், குழந்தைகள் பாதிக்கப்படுவதில்  இருந்து தான் இந்த அரசுக்கு வருவாய் ஈட்டி வருகிறது. மக்களை அழித்து, மக்களை வேதனைப்படுத்தி, குறிப்பாக, பெண்களை வேதனைப்படுத்தி வருவாய் அடைவது மிகவும் கண்டனத்திற்குரியது. கல்வியில், மருத்துவத்தில்  முன்னேறியிருந்த தமிழகம், இன்று மது குடிப்பதில் நம்பர் ஒன்னாக இருக்கிறது.

இன்றைக்கு நடக்கிற போராட்டங்கள், நீட் உட்பட பல திட்டங்கள் என எல்லா விஷயங்கள் பற்றி மக்கள் யோசிக்க கூடாது. அவர்களை யோசிக்க விடாமல் எப்போதும் ஒரு போதையில் வைத்திருக்க வேண்டிய நிலை  அவர்களுக்கு தேவைப்படுகிறது. குறிப்பாக, குடிப்பவர்களுக்கு மது இல்லாமல் இருக்க முடியாது. இதன் மூலம் அவர்களை சிந்திக்க வைக்காமல் இப்போது வரை மக்களை கன்ட்ரோலில் வைக்கத்தான்  அரசு இந்த டாஸ்மாக்கை  திறந்து வைத்துள்ளது. அரசாங்கத்தாலோ, நீதிமன்றத்தாலோ மதுக்கடைகள் மூடப்பட்டு விடும் என்ற நம்பிக்கை துளியும் இல்லை. போராட்டத்தின் மூலம் தான் டாஸ்மாக் கடைகளை மூட முடியும். மிகப்பெரிய அளவில்  போராட்டம் நடந்து டாஸ்மாக் கடையை உடைக்கும் அளவுக்கு செல்லும் வரை அவர்கள் டாஸ்மாக் கடையை மூட மாட்டார்கள்.

மதுக்கடைகள் படிப்படியாக மூடுவதற்கு என்ன காரணம் என்றால் கடந்த தேர்தல் தான். அதிமுகவை தவிர அனைத்து கட்சிகளும் மது விலக்கு ெகாண்டுவருவோம் என்று மக்களுக்கு வாக்குறுதி அளித்தனர். ஆனால், அதிமுக  மட்டும் படிப்படியாக மது விலக்கை கொண்டு வருவோம் என்று அறிவித்தனர். படிப்படியாக அறிவித்து விட்டு தற்போது அவர்கள் மதுக்கடையை மூட என்ன செய்துள்ளனர். அடுத்த தேர்தல் வரவுள்ள நிலையில் அவர்கள் எந்த  நடவடிக்கையும் எடுக்கவில்லை. மக்களை முட்டாளாக்குவதற்கான வாக்குறுதிகள் தான் அது. சட்டத்தை முதலில் மீறுவது அரசும், காவல்துறையும் தான். 21 வயதிற்கு மேல் மது கொடுக்கலாம் என்று சட்டம் இருந்தாலும் அது தப்பு தான். 21 வயதிற்கு மேல் மது குடித்து, நீங்கள் செத்து போங்கள் என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம். பூரண மதுவிலக்கு கண்டிப்பாக கொண்டு வர வேண்டும்.

அரசு டாஸ்மாக் கடையை மூடினால் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பார்கள். அப்படி காய்ச்சி விற்பவர்கள் அரசியல்வாதிகளுக்கு கீழ் இருப்பவர்கள் தான். அவர்களை அரசு நினைத்தால் கண்டிப்பாக அடக்க முடியும். மக்கள் செய்கிற  தப்பை கேட்க அரசு உள்ளது. அரசாங்கம் இப்போது அந்த தப்பை செய்கிறது. எத்தனை மதுக்கடைகள் திறக்கப்படுகிறதோ, அதற்கு இணையாக அரசு பள்ளிகள் மூடப்படுகிறது. வருமானம் வருகிறது என்ற காரணத்திற்காக மக்களை  அழிக்கக்கூடிய மதுக்கடைகளை திறக்கின்றனர். அதே உழைக்கும் மக்கள் படிக்க கூடிய அரசு பள்ளிகளை மூடுவது எந்த விதத்தில் நியாயம். ஏழை குழந்தைகளுக்காக அரசு பள்ளிகளை திறக்க வேண்டும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : fight ,shop ,Tasmag ,militia , Struggle, Tasmacht shop, grown up, alcoholic fighter
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி