×

திருவாரூரில் போலீஸ் பாதுகாப்பை மீறி கருவூல அலுவலகத்திற்குள் புகுந்து திருட்டு: கணினி, ஆவணங்களை எடுத்து சென்றனர்

திருவாரூர்: திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட கருவூல அலுவலகத்தில் இரவு பாதுகாப்பு பணியில் இருந்த 4 போலீசாரையும் மீறி 2 மர்ம நபர்கள் உள்ளே சென்று அங்குள்ள கணினியை  திருடி சென்றவுடன் பைக் ஒன்றுக்கும் தீவைத்துக் கொளுத்திய சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தின் வலது பக்கத்தில் மாவட்ட கருவூல அலுவலகமும் இடதுபக்கத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திற்கான பாதுகாப்பு அறையும் இருந்து வருகிறது. இந்த இரண்டு பகுதிகளுக்கும் பகலில் துப்பாக்கியுடன் கூடிய 2 போலீசார் இரவில் 2 போலீசார் என பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 10க்கும் மேற்பட்ட இரவு பாதுகாவலர்களும் பணியில் இருந்து வருகின்றனர். நேற்று முன்தினம் கருவூலத்தில் இரவு பாதுகாவலராக சேகர் (45) என்பவரும் கலெக்டர் அலுவலகத்தின் இரவு பாதுகாவலராக ராஜேந்திரன்(45) என்பவரும் பணியில் இருந்துள்ளனர்.

இவர்களை தவிர ஆயுதப்படை பிரிவை சேர்ந்த போலீசார் அஞ்சலி (25), முத்துலட்சுமி (24) ஆகியோர் கருவூல அலுவலகத்தின் பாதுகாப்பு பணியிலும், கனகாம்பாள் (30), கவிதா (25) ஆகியோர் மின்னணு வாக்குப்பதிவு  இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கான பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டிருந்தனர். நள்ளிரவு 2 மணி அளவில் மாவட்ட கருவூல அலுவலகத்திற்கு வந்த 2 மர்ம நபர்கள்  தாங்கள் இருவரும் கலெக்டர் அலுவலக ஊழியர்கள் என்றும் எங்களுக்கு முக்கியமான பணிகளை முடிக்க வேண்டி இருப்பதால் நாங்கள் உள்ளே செல்ல வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அவர்களை போலீசார் உள்ளே அனுப்பினர். உள்ளே சென்ற இருவரும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் அறையின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாதுகாவலர் ராஜேந்திரன் பைக்குக்கு தீ வைத்து  கொளுத்திவிட்டு  மாவட்ட கருவூலத்தில் இருந்த 2 கணினிகள் மற்றும் முக்கிய ஆவணங்களை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பினர். இதனையடுத்து பைக் எரிவதை கண்ட ராஜேந்திரன் அங்கிருந்து அலறி அடித்துக்கொண்டு தகவலை போலீசாரிடம் தெரிவித்தார். அதன் பின்னரே மாவட்ட கருவூலத்தில் கணினிகள் மற்றும் கோப்புகள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து மாவட்ட கருவூல அலுவலர் லலிதாவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் திருவாரூர் தாலுகா போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.  பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tiruvarur ,scandal ,Treasury Office , Tiruvarur, Police, Treasury Office, Theft, System, Documents
× RELATED தொழில்நுட்ப கோளாறு...