×

சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கு கொல்கத்தா போலீஸ் கமி‌ஷனரிடம் 2ம் நாளாக சிபிஐ தீவிர விசாரணை

ஷில்லாங்: சாரதா சிட்பண்ட் மோசடி தொடர்பாக கொல்கத்தா நகர போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரிடம் 2வது நாளாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை  மேற்கொண்டனர். அவருடன் சேர்த்து திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. குணால் கோஷ் இடமும் விசாரணை நடத்தப்பட்டது. மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த சாரதா சிட்பண்ட் மோசடி குறித்து, தற்போதைய கொல்கத்தா போலீஸ் கமி‌ஷனர் ராஜீவ் குமார் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு  விசாரித்து வந்தது. பின்னர், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இந்த வழக்கு சிபிஐ.க்கு மாற்றப்பட்டது. சிபிஐ இந்த விசாரணையை தொடங்கிய பிறகு, வழக்கு தொடர்பாக பல ஆவணங்கள் மாயமாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக ராஜீவ் குமார் மீது சிபிஐ  குற்றம் சாட்டியது. இது தொடர்பான விசாரணைக்காக சிபிஐ அலுவலகம் வரும்படி பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. எனவே, இது குறித்து ராஜீவ் குமாரிடம்  விசாரிக்க கடந்த 3ம் தேதி சிபிஐ அதிகாரிகள் கொல்கத்தா  சென்றனர். ஆனால், மேற்கு வங்க போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, கைது செய்து பின்னர் விடுவித்தனர். சிபிஐ.யின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 3 நாட்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனிடையே, தங்கள்  கடமையை செய்யவிடாமல் கொல்கத்தா போலீசார் தடுத்து நிறுத்தியதாக சிபிஐ தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், மேகாலயா மாநிலத்தில் உள்ள ஷில்லாங் நகர சிபிஐ அலுவலகத்தில் ராஜீவ் குமார் விசாரணைக்கு ஆஜராகவும், முழு  ஒத்துழைப்பு அளிக்கவும் கடந்த 5ம் தேதி உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து ஷில்லாங்கில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ராஜீவ் குமார் நேற்று முன்தினம்  ஆஜரானார். அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் 9 மணி நேரம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து 2வது நாளாக நேற்றும் அவரிடம் 3 சிபிஐ அதிகாரிகள் கொண்ட குழு விசாரணை நடத்தியது. இந்த விசாரணையின் போது அவர் முழு ஒத்துழைப்பு  கொடுத்ததாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன. மம்தா பானர்ஜிக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்த திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்பி.யுமான முகுல் ராய் தற்போது, பதவிகளை துறந்து விட்டு  பாஜ.வில் இணைந்துள்ளார். இவரும் நேற்று காலை 10 மணியளவில் ஷில்லாங் சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார். இவர் கடந்த 2013ம் ஆண்டு திரிணாமுல் காங்கிரஸ்  எம்பி.யாக இருந்தபோது, இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டார். பின்னர் 2016ம் ஆண்டு முதல் ஜாமீனில் வெளியில் உள்ளார். ராஜீவ் குமார், முகுல் ராய்  ஆகியோரிடம் சிபிஐ ஒரே நேரத்தில் விசாரணை நடத்தியது.முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த முகுல் ராய், “இது தொடர்பாக கூறுவதற்கு ஒன்றுமில்லை. விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் வந்தது. அதனால்  வந்துள்ளேன். இந்த வழக்கில் சிபிஐ.க்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறேன்” எனக் கூறினார்.

முகுல் ராய் மீது கொலை வழக்கு
மேற்கு வங்கத்தில் கிருஷ்ணகன்ஜ் தொகுதியின் எம்எல்ஏ.வாக இருந்தவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சத்யஜித் பிஸ்வாஸ்(41). இவர் கடந்த  சனிக்கிழமையன்று பூல்பாரி மாவட்டத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார். இது தொடர்பாக மேற்கு வங்க போலீசார்  வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்த கொலை வழக்கில் குற்றவாளிகளாக கருதப்படும் 4 பேரில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நான்கு  பேரில் பாஜ.வை சேர்ந்த முகுல்ராயின் பெயரும் இடம் பெற்றுள்ளது. இது பற்றி முகுல் ராய் கூறுகையில், “சத்யஜித் கொலை செய்யப்பட்ட சம்பவம்  வருத்தமளிக்கிறது. ஆனால், அதற்கான பழியை பாஜ மீது சுமத்த முயற்சிப்பது அரசியல் சதியாகும்” என்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sharad Dikshit ,CBI ,police commissioner , Sharad Dikshit,fraud case, CBI inquiry,into police commissioner for 2 days
× RELATED பள்ளி நிர்வாகத்தினரிடம் பணம் வாங்கி...