×

குட்டிக்கரணம் போட்டாலும் தமிழகத்தில் பாஜ காலூன்ற முடியாது : ஆதித்தமிழர் மாநாட்டில் மு.க.ஸ்டாலின் பேச்சு

சேலம்: குட்டிக்கரணம் போட்டாலும் தமிழகத்தில் பாஜ காலூன்ற முடியாது என சேலத்தில் நடந்த ஆதித்தமிழர் பேரவை மாநாட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். ஆதித்தமிழர் பேரவை வெள்ளிவிழாவை முன்னிட்டு அருந்ததியர் அரசியல் மாநாடு சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியில் நேற்று நடைபெற்றது. நிறுவன தலைவர் அதியமான் தலைமை வகித்தார்.  இந்த மாநாட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:கலைஞர் இயற்றிய உள் ஒதுக்கீடு சட்டத்தால்தான் கடந்த 10 ஆண்டுகளில் அருந்ததியர் பிள்ளைகள், இளைஞர்கள் வாழ்க்கையில் ஒளியேற்றப்பட்டுள்ளது.  தற்போது எடப்பாடி தலைமையிலான அரசு, அந்த சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வில்லை என இந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. விரைவில் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலோடு, 21 சட்டமன்ற தொகுதி அல்லது ஒட்டுமொத்த தமிழ்நாடு முழுமைக்கும் சட்டப்பேரவை தொகுதிக்கான தேர்தல் நடைபெறும். அப்போது ஏற்படும் மாற்றத்தால், திமுக ஆட்சி உதயமாகி பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

விவசாயிகள் வாழ்க்கை தரத்தில் மும்முறை தாழ்ந்து போயுள்ளனர். தலைநகர் டெல்லியில் விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம் நடத்தியது தான் இந்த அரசின் சாதனை. இது மோடிக்கு ஏற்பட்ட அவமானம் அல்ல. இந்தியாவில் உள்ள அனைவருக்கும் அவமானமாகும். தற்போது, திடீர் ஞானதோயம் பிறந்து, தமிழகத்திற்கு அடிக்கடி வந்து செல்வதை மோடி வழக்கமாக கொண்டுள்ளார். குட்டிக்கரணம் போட்டாலும் தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது. காலே இல்லாத நிலையில், எப்படி காலூன்ற முடியும்?. விவசாயிகளுக்கு ₹6 ஆயிரம் தரப்படும் என அறிவித்துள்ளது, அவர்கள் மீதான கரிசனம் அல்ல, ஓட்டுக்கு மறைமுகமாக பணம் வழங்கும் தந்திரமாகும்.  

மாதம் ₹60 ஆயிரம் சம்பளம் வாங்குபவர்கள் எல்லாம் ஏழைகள் என்றால், அதற்கு கீழ் உள்ளவர்களின் நிலையை எண்ணிப்பார்க்க வேண்டும். இது, உயர் ஜாதியினரின் வாக்குகளை பெறுவதற்காக தந்திர நோக்கத்தோடு அறிவிக்கப்பட்டுள்ளது. முகத்தில் குத்துவது போல் வந்து, வயிற்றில் குத்தும் தந்திரம் மோடிக்கு மட்டும் தான் தெரியும். மத்தியில் ஆட்சி நடக்கவில்லை. மோடி பிரைவேட் லிமிடெட் கம்பெனி நடத்துகிறார். அதேபோல், தமிழகத்தில் எடப்பாடி கூலிப்படை ஆட்சி நடத்துகிறார். இங்கு, கொலை, கொள்ளை செய்யப்படும் என போர்டு மட்டும் தான் மாட்டவில்லை. கல்வி, வேலைவாய்ப்பு, சமூக வளர்ச்சியில் ஒற்றுமை ஏற்பட மத்திய-மாநில அரசுகளை அகற்றி திமுக ஆட்சி அமையும் காலம் வரும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : state ,speech ,Tamil Nadu ,convention ,MK Stalin , DMK leader, MK Stalin, BJP
× RELATED தமிழ்நாடு பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் மாநில தலைவர் அண்ணாமலை!