×

வடகிழக்கு மாநில மக்களுக்கு குடியுரிமை மசோதாவால் எந்த பாதிப்பும் ஏற்படாது: அசாமில் பிரதமர் மோடி உறுதி

சங்சாரி: ‘‘வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் அசாம் மக்களுக்கு குடியுரிமை மசோதாவால் எந்த பாதிப்பும் ஏற்படாது’’ என அசாமில் பிரதமர் மோடி பேசி உள்ளார்.அருணாச்சல பிரதேசம், அசாம், திரிபுரா ஆகிய வடகிழக்கு மாநிலங்களுக்கு 2 நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று முன்தினம் மாலை புறப்பட்டு சென்றார்.  அருணாச்சல பிரதேசத்தின் இடா  நகரில் நேற்று அவர் ஹோலோங்கி பசுமை வழி விமான நிலையத்திற்கான அடிக்கல் நாட்டினார். இதைத்தொடர்ந்து, அசாம் மாநிலத்தில் வடகிழக்கு மாநிலங்களுக்கான எரிவாயு கட்டமைப்புக்கான அடிக்கல் நாட்டினார். பின்னர் திரிபுராவின் அகர்தலாவில் கார்ஜி-பெலோனியா ரயில் தடத்தை  நாட்டிற்கு அர்ப்பணித்தார். முன்னதாக, அசாமின் சங்சாரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாவது:
டெல்லியில் ஏசி அறையில் இருந்து கொண்டு, நாடாளுமன்றத்தில் சண்டை போட்டுக் கொண்டிருப்பவர்கள் தேசிய குடியிரிமை மசோதா குறித்து தவறான தகவல்களை பரப்புகின்றனர்.  அவர்களுக்கு வடகிழக்கு மாநில மக்கள் மீது அக்கறை இல்லை.  வடகிழக்கு மாநிலங்களில் சட்ட விரோதமாக ஊடுருவியவர்களுக்கும், தங்கள் மதநம்பிக்கையால், அங்கிருந்து விரட்டப்பட்ட அப்பாவி மக்களுக்கும் வித்தியாசம் உள்ளது. பாகிஸ்தான்,  வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகியவை பிரிவினைக்குப் பின் தனி நாடாகின. இதனால், சொந்த நாட்டிலேயே சில பிரிவினர் சிறுபான்மையினராகி விட்டனர். பிரிவினையால் பிரிந்தவர்கள்,  இந்தியாதான் பாதுகாப்பான நாடு என்பதால் இங்கு அகதிகளாக தஞ்சமடையும் நிலை உள்ளது. அவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கவே குடியுரிமை மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.

குடியுரிமை மசோதாவால் வடகிழக்கு மாநில மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என உறுதி அளித்துக் கொள்கிறேன்.எதிர்க்கட்சிகளின் ‘கலப்படக் கூட்டணி’ எனக்கு எதிராக அவதூறுகளை குவிக்கிறது. என்னை ஏளனம் செய்ய ஒரு ஒலிம்பிக் போட்டியே நடந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா வந்து 6 ஆண்டுகளாக வசித்து வரும் இந்துக்கள், சமணர்கள், கிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், பவுத்தர்களுக்கு குடியுரிமை  வழங்க வகை செய்யும் வகையில் தேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாநிலங்களவையில் இம்மசோதா நிலுவையில் உள்ளது.  இம்மசோதாவுக்கு அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்த காரணத்திற்காக நேற்று முன்தினம் பிரதமர் மோடி கவுகாத்தி வந்த போது, மாணவர் அமைப்பினர் சிலர் கருப்பு கொடி காட்டி ‘கோ பேக் மோடி’ என கோஷமிட்டபடி எதிர்ப்பு  தெரிவித்தனர்.   வடகிழக்கு மாநில பயணத்தை பிரதமர் மோடி முடித்துக் கொண்டு, இன்று ஆந்திரா, தமிழகம், கர்நாடகா மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைக்கிறார்.

சீனா எதிர்ப்புக்கு பதிலடி
அருணாச்சல பிரதேசத்தை சர்ச்சைக்குரிய பகுதியாக கருதும் சீனா, அங்கு பிரதமர் மோடி சென்றதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்கு இந்தியா பதிலடி தந்துள்ளது. ‘‘இந்தியாவின்  ஒருங்கிணைந்த பகுதி அருணாச்சல். இதில் யாரும் தலையிட முடியாது’’ என வெளியுறவு துறை அமைச்சகம் கூறி உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Nation ,Modi ,state ,Assam , Nation ,affect ,people ,northeastern state, Prime Minister Modi confirmed in Assam
× RELATED மோடி தலைமையில் அமைதியான ஆட்சி பிற...