×

நெல்லை உள்பட 4 மாவட்டங்களுக்காக அரசு கால்நடை பண்ணையில் தீவன மரக்கன்றுகள் உற்பத்தி

நெல்லை : நெல்லை உள்பட 4 மாவட்டங்களில் உள்ள கிராமப்புற கால்நடைகளுக்கு இலவசமாக வழங்க அரசு கால்நடை பண்ணையில் பல ஆயிரம் தீவன மரக்கன்றுகள் உற்பத்தி செய்து பராமரிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் நெல்லை மாவட்டம் பழைய பேட்டையில் கால்நடைகள் பராமரிப்பு பண்ணை செயல்பட்டு வருகிறது. இங்கு ஆடுகள், வளர்ப்பு பன்றிகள், மாடுகளுக்கான தீவனம் சார்ந்த மரக்கன்றுகள் ஒரு ஏக்கரில் உற்பத்தி செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

கால்நடைகளுக்கு பசுந்தீவனம் கொடுப்பதால் உடல் வளர்ச்சி, அதிகளவு பால் வளம், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பதால் கால்நடை பராமரிப்பு பண்ணைகளில் கூவாபுல், அகத்தி, வேம்பு, கல்யாண முருங்கை, குளோரி உள்ளிட்ட தீவன கன்றுகள் வளர்க்கப்படுகிறது. இவைகள் பிரத்ேயக பாக்கெட்களில் செம்மண் நிரப்பி விதைகள் இட்டு 3 மாதங்களில் கன்றுகளாக வளர்ந்து செழித்து நிற்கும். இந்த தீவன மரக்கன்றுகளை கிராமங்களில் உள்ள விவசாயிகள் அப்பகுதியில் உள்ள கால்நடை மருத்துவமனைகளில் தங்களது கால்நடைகள் குறித்த விபரங்களை தெரிவித்து ேதவையான தீவன மரக்கன்றுகள் கேட்டு பெற்றுக் கொள்ளலாம். விவசாயிகள் வளர்க்கும் கால்நடைகள் எண்ணிக்கை உறுதி செய்யப்பட்டு தீவன மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படுகிறது.

நெல்லை மாவட்ட கால்நடை பராமரிப்பு பண்ணையில் உற்பத்தி செய்யப்படும் தீவன மரக்கன்றுகள் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தேனி மாவட்டங்களில் உள்ள விவசாயிகளால் வளர்க்கப்படும் கால்நடைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 4 மாவட்டங்களுக்கும் ஒரு லட்சம் மரக்கன்றுகள் வழங்க அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. அரசின் இலவச திட்டத்தின் மூலம் கால்நடைகள் பெற்ற விவசாயிகளுக்கும் தீவன மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், அரசு கால்நடை பராமரிப்பு துறை மாவட்ட கால்நடை பண்ணை மூலம் கால்நடைகளுக்கான தீவன கன்றுகள் கிராமப்புற விவசாயிகளுக்கு அவர்கள் வளர்க்கும் கால்நடைகளின் எண்ணிக்கைக்கேற்ப முன்பதிவின் அடிப்படையில் வழங்கப்படுகின்றன. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தேனி உள்பட 4 மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு நெல்லை கால்நடை தீவன கன்றுகள் தேவைக்கு ஏற்ப வழங்கப்பட்டு வருகிறது. தேனி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு தலா 20 ஆயிரமும், குமரி மாவட்டத்துக்கு 10 ஆயிரமும், நெல்லைக்கு 1500ம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்துக்கு 50 ஆயிரம் கன்றுகள் இலக்காகும். இதுபோல் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் குறிப்பிட்ட இலக்கின் அடிப்படையில் தீவன கன்றுகள் வழங்கப்படுகிறது என்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : farm ,Districts ,Nellai , Nellai ,districts,Saplings
× RELATED தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு