×

விளை நிலங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற கோரிக்கை

பொள்ளாச்சி :  பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் உள்ள பல கிராமங்களில் அதிகரிக்கும், சீமைக்கருவேல மரங்களை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   பொள்ளாச்சி சுற்றியுள்ள கிராமங்களில் விவசாய நிலங்களே அதிகம் உள்ளது. அங்குள்ள விவசாய விளை நிலங்களில் தென்னை மற்றும் மானாவாரி, காய்கறி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், நிலத்தடி நீரை அதிகம் உறிஞ்சும் தன்மைகொண்ட சீமைக்கருவேல மரங்கள், விவசாய நிலங்களில் அதிகமாக உள்ளது.

மேலும், ரோட்டோரம் மற்றும் புறம்போக்கு இடங்களிலும், குளம் மற்றும் பாசன கால்வாய் ஓரங்களிலும் அதிகரித்துள்ளது. இதில், வடக்கிபாளையம், பொன்னாபுரம், நடுப்புணி, சூலக்கல், நெகமம், முத்தூர், கஞ்சம்பட்டி, பூசாரிப்பட்டி, கிணத்துக்கடவு, ஆவல்சின்னாம்பாளையம், சமத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் ரோட்டோரம் சீமைக்கருவேல மரங்கள் உயரமாக முள்காடுபோல் வளர்ந்து உள்ளது.

இந்த சீமைக்கருவேல மரங்களை அப்புறப்படுத்த சம்பந்தபட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், நிலத்தடிநீரை உறுஞ்சும் சீமைக்கருவேல மரங்களை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கையில், அதிகாரிகள் தீவிரம் காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து தன்னார்வலர்கள் கூறியதாவது: சீமை கருவேல மரங்கள் நிலத்தடி நீரை அதிகம் உறிஞ்சும் தன்மை கொண்டவையாகும். மேலும், காற்றின் ஈரப்பதத்தையும் உறிஞ்சி விடுகிறது. சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு சீமைக்கருவேல மரங்களை வெட்டி அகற்ற கோர்ட் உத்தரவு பிறப்பித்தது. அந்நேரத்தில் கண்துடைப்புடன் குறிப்பிட்ட கிராமங்களில் மட்டும் சீமைக்கருவேல மரங்கள் வெட்டப்பட்டது.

அதன்பின், சீமைக்கருவேல மரங்களை முழுமையாக வெட்டி அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபடாமல் கிடப்பில் போட்டதுடன், ஊராட்சி கிராமங்களில் சீமைக்கருவேல மரங்கள் வெட்டுவதை தவறு என கூறுகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பு, சீமைக்கருவேல மரங்களை கணக்கெடுத்து அகற்ற வட்டார வளர்ச்சி அதிகாரிகள், வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, இந்து சமய அறநிலையத்துறை கொண்ட குழு அமைக்கப்பட்டது.
மேலும், தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பயனாளிகள் மூலம் சீமை கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. சில மாதங்கள் நடவடிக்கை எடுக்கப்பட்டு பின்னர் கிடப்பில் போடப்பட்டுள்ளனர்.

எனவே, இனிவரும் காலங்களில் சீமைக்கருவேல மரங்களை அகற்றி விவசாயம் செழிக்கவும், நிலத்தடிநீர் மட்டம் குறையாமல் இருக்கவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்’ என்று விவசாயிகள் கூறினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pollachi,seemai karuvela trees,people,farmers
× RELATED 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்