×

அரசு பங்களாவை காலி செய்ய மறுத்து மேல்முறையீடு செய்த தேஜஸ்விக்கு அபராதம்: உச்ச நீதிமன்றம் அதிரடி

புதுடெல்லி: அரசு பங்களாவை காலி செய்ய மறுத்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த பீகார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்த அவருக்கு 50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.பீகாரில் நிதிஷ் குமார் தலைமையிலான மெகா கூட்டணி அரசில் துணை முதல்வராக இருந்தவர் லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ். இவருக்கு பாட்னாவின் முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லம் அருகே அரசு பங்களா ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, பீகாரில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து துணை முதல்வராக சுஷில் குமார் மோடி நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, தேஜஸ்வி தங்கியுள்ள அரசு பங்களாவை காலி செய்யுமாறு தற்போதைய தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையிலான மாநில அரசு உத்தரவிட்டது. ஆனால், அவர் பங்களாவை காலி செய்ய மறுத்து பாட்னா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த மனுவை கடந்த ஜனவரி 7ம் தேதி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மேலும், அரசு பங்களாவை காலி செய்யவும் தேஜஸ்விக்கு உத்தரவிட்டது. உயர் நீதின்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தேஜஸ்வி மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம் தேஜஸ்வியின் மனுவை தள்ளுபடி செய்தது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு அளித்த தீர்ப்பில், ‘தேஜஸ்வி எதிர்க்கட்சி தலைவருக்கான இல்லத்திற்கு இடம் பெயர வேண்டும்.
உயர் நீதின்றம் தள்ளுபடி செய்த நிலையிலும் தேஜஸ்வி உச்ச நீதிமன்றத்தில் எப்படி வழக்கு தொடர்ந்தார்? நீதிமன்றத்தின் பொன்னான நேரத்தை வீணடித்ததற்காக அவருக்கு ₹50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும், அவர் அரசு பங்களாவை காலி செய்து ஒப்படைக்க வேண்டும்’ என தெரிவித்தனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tejasvi ,Supreme Court , Government Bungalow, Tejasvi, fine, Supreme Court
× RELATED பிரதமர் மோடி வேட்பு மனுத் தாக்கலை...