×

சிட்பண்ட் மோசடி செய்தவர்களும், காப்பாற்றுபவர்களும் தப்ப முடியாது: மேற்கு வங்கத்தில் மோடி ஆவேசம்

சுராபந்தர்: ‘‘சிட்பண்ட் மோடியில் ஈடுபட்டவர்களும், அவர்களை பாதுகாப்பவர்களும் தப்பிக்க முடியாது’’ என மேற்கு வங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி ஆவேசமாக பேசினார். மேற்கு வங்க மாநிலம், சுராபந்தர் நகரில் கொல்கத்தா உயர் நீதிமன்ற கிளையை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். பின்னர், ஜல்பைகுரி மாவட்டத்தில் 41.7 கிமீ தூரம் நெடுஞ்சாலை அமைக்கும் திட்டத்துக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். அங்கு நடத்த பாஜ பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:வன்முறை கலாசாரத்தை முந்தைய கம்யூனிஸ்ட் அரசிடம் இருந்து, மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பெற்றுள்ளது. மேற்கு வங்கம் கலாசார பாரம்பரியம் மிக்க மாநிலம். ஆனால், தற்போது இங்கு சட்டம் ஒழுங்கு இல்லை. தொழிற்சாலைகள், வர்த்தக மையங்கள் இல்லை. இளைஞர்கள் வேலைக்காக வேறு மாநிலங்களுக்கு செல்கின்றனர். மேற்கு வங்கத்தின் பெருமையை திரிணாமுல் கெடுத்துவிட்டது.

மோசடி செய்தவர்களை நாங்கள் வெளிநாட்டிலிருந்து இங்கு கொண்டு வருகிறோம். ஆனால், இங்கு இருப்பவர்கள் மோசடியில் ஈடுபட்டவர்களை பாதுகாக்கின்றனர். மோசடியில் ஈடுபட்டவர்களை காப்பாற்ற ஒரு முதல்வர் தர்ணாவில் ஈடுபட்டதாக  வரலாறு இல்லை. சிட்பண்ட் மோசடியில் ஈடுபட்டவர்களை காப்பாற்ற மம்தா ஏன்  தர்ணாவில் அமர்ந்தார் என்பதை அறிய ஏழை மக்கள் விரும்புகின்றனர். இந்த மோசடியில் ஈடுபட்டவர்கள்,  அவர்களை காப்பாற்றுபவரை இந்த காவலாளி தப்ப விட மாட்டான்.  ஊழலில் ஈடுபடும் அனைவரும் மோடியை கண்டு பயப்படுகின்றனர். அடுத்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வீழ்ச்சியை சந்திக்கும். புதிதாக உருவாக்க திட்டமிட்டுள்ள மெகா கூட்டணி, மெகா கலப்பட அணி. இதற்கு எந்த கொள்கையும், நாட்டைப் பற்றி எந்த தொலைநோக்கு பார்வையும் இல்லை. திரிபுராவில் பாஜ வெற்றி பெற்றது போல், மேற்கு வங்கத்திலும் வெற்றி பெறும். பாஜ தொண்டர்கள் யாருக்கும் பயப்பட மாட்டார்கள். இவ்வாறு மோடி கூறினார்.

ஊழல் மாஸ்டர் மோடி
கொல்கத்தாவில் நடந்த உலக வர்த்தக மாநாட்டில் கலந்து கொண்ட பின் பேட்டியளித்த மம்தா பானர்ஜி, ‘‘ரபேல் ஒப்பந்தம் நாட்டின் மிகப் பெரிய ஊழல். இதில் எவ்வளவு பணம் கை மாறியது, என்ன நடந்தது என்பது எனக்கு தெரியாது. ஆனால், திரைமறைவில் ஏதோ நடந்துள்ளது. ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக அவர் (மோடி) நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன் மூலம் காவலாளி திருடன் என்பது தெளிவாக தெரிகிறது. அவர் மோடி அல்ல மேடி. இது போன்ற ஊழல் பிரதமரை நாடு பார்த்ததில்லை. ஊழல் மாஸ்டராக மோடி உள்ளார். அவர் கர்வம் பிடித்தவர். நாட்டின் அவமானம். அவரை விவரிக்க வார்த்தைகள் இல்லை. தரம்தாழ்ந்து இருக்கிறார். இதுபோன்ற நபர் பிரதமராக இருப்பதை நாம் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. பிரதமர் பதவிக்கு நாம் மதிப்பு அளிக்கிறோம். ஆனால், இந்த மனிதருக்கு அல்ல. 23 முக்கிய கட்சிகள் தனக்கு எதிராக ஒன்றிணைந்ததை கண்டு மோடி பயந்து விட்டார்’’ என்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : fraudsters ,defenders ,West Bengal ,Narendra Modi , The scandal fraud, West Bengal, Modi
× RELATED மேற்கு வங்கத்தில் குண்டு வெடித்து சிறுவன் உயிரிழப்பு..!!