×

தா.பழூர் அருகே கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு : வீடுகளை தண்ணீர் சூழ்ந்த அவலம்

தா.பழூர்:  கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைப்பால், அணைக்குடம் சாலையோரம் உள்ள காலனி வீடுகளில் குடிநீர் வீடுகளை சூழ்ந்து உள்ளது.
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே அணைக்குடம் கிராமம் உள்ளது. ஜெயங்கொண்டம்  கும்பகோணம் செல்லும் சாலையில் மேற்குப் பகுதியில் அணைக்குடம் காலனி தெரு வீடுகள் உள்ளன. இந்நிலையில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் ஏற்பட்ட உடைப்பால் வீடுகளின் வாசல் பகுதியில் தண்ணீர் சூழ்ந்து குளம்போல் தேங்கி உள்ளது. மேலும், குடிநீர் வீணாகி வீடுகளை ஆக்கிரமித்து வீடுகளுக்குள் நீர் புகும் நிலை உருவாகியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் இரவில் தூக்கமின்றி தவித்து வருகின்றனர்.

தண்ணீர் சூழ்ந்த நிலையில் இரவு நேரங்களில் வீடுகளுக்குள் பூச்சி, பூரான், தேள், பாம்பு போன்றவை புகுவதாலும் மக்கள் அச்சத்தில் உள்ளனர். வீடுகளில் சுப நிகழ்ச்சி காரியங்கள் என்று எந்த நிகழ்வுகள் இருந்தாலும் வீடுகளின் முன்பு பந்தல் அமைப்பது மிகவும் சிரமமாக உள்ளது. மேலும், கேபிள் ஒயர்கள் தண்ணீரில் கிடப்பதால் மிகவும் பயத்துடன் சாலையை கடந்து வருவதாகவும். வீட்டை சுற்றிலும்  தண்ணீர் தேங்கி இருப்பதால் இரவு நேரங்களில் கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகிறது. இதனால் டெங்கு மலேரியா போன்ற நோய்கள் பரவ வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தில் குழாயில் ஏற்பட்டிருக்கும் உடைப்பை சரி  செய்ய வேண்டியும், சாலையோரம் கழிவுநீர் வாய்க்கால் அமைத்து மழை காலங்களிளும் தண்ணீர் தேங்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க  வேண்டும்  என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kodidi ,Thalur , kollidam, drinking water, housing
× RELATED தா.பழூர் அரசு பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்