×

வேலங்காடு கிராமத்தில் எருதுவிடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள் : மாடு முட்டி 10 பேர் காயம்

அணைக்கட்டு: அணைக்கட்டு அடுத்த வேலங்காடு கிராமத்தில் நடந்த எருதுவிடும் விழாவில் காளைகள் சீறிப்பாய்ந்தன. இதில் மாடு முட்டியதில் 10 பேர் காயம் அடைந்தனர். அணைக்கட்டு தாலுகா வேலங்காடு கிராமத்தில் 52ம் ஆண்டு காளைவிடும் விழா நேற்று நடந்தது. இதற்காக சாலையின் இருபுறங்களிலும் தடுப்பு கம்புகள் கட்டப்பட்டு ஓடுபாதையில் மண்கொட்டி ஏற்பாடு செய்திருந்தனர். இதில் வேலூர், அணைக்கட்டு, காட்பாடி, ஒடுகத்தூர் மற்றும் வெளியூர்களில் இருந்து 307 மாடுகள் அழைத்து வரபட்டன. விழாவை காண சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கிராமத்தில் குவிந்தனர்.
 
உதவி ஆணையல் (கலால்) பூங்கொடி விழாவை தொடங்கி வைத்தார்.  கால்நடை மருத்துவர்கள் பரிசோதனைகளுக்கு பின்னர் காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக வீதியில் அவிழ்த்து விடபட்டன. வீதியில் சீறிப்பாய்ந்து ஓடிய காளைகளை இளைஞர்கள் உற்சாகத்துடன் விரட்டினர். இதில் அதிவேகமாக ஓடி குறிப்பிட்ட தூரத்தை முதலில் கடந்த காளையின் உரிமையளருக்கு முதல் பரிசாக 2 சவரன் நகை, 2ம் இடம் பிடித்த காளைக்கு ஒன்றரை சவரன் நகை மற்றும் தங்க நாணயங்கள் உட்பட மொத்தம் 37 பரிசுகள் வழங்கப்பட்டது.

ஆம்பூர் டிஎஸ்பி சச்சிதானந்தம் தலைமையில்  இன்ஸ்பெக்டர்கள் கோவிந்தசாமி, சரவணன் உட்பட 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தாசில்தார் ஹெலன்ராணி, மண்டல துணை தாசில்தார் பன்னீர்செல்வம், வருவாய் ஆய்வாளர் பிரகாஷ், விஏஓ கவுதம் ஆகியோர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவில் சீறிப்பாய்ந்து ஓடிய காளைகள் முட்டியதில் 10 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு பொய்கை மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். படுகாயமடைந்த இளைஞர் ஒருவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல்சிகிச்சைகாக ஆம்புலன்ஸ் மூலம் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : village ,Velangadu , Velankatu, bulls, calves
× RELATED வந்தவாசி அடுத்த பொன்னூர் கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம்..!!