×

கணினி மயமாக மாறி வந்தாலும் வரவு, செலவு நோட்டுகளின் விற்பனை : வெளியூர்களுக்கு வாங்கி செல்லும் வணிகர்கள்

கும்பகோணம்: கணினி மயமாக மாறி வந்தாலும் கும்பகோணத்தில் தயாரிக்கப்படும் வரவு, செலவு நோட்டுகளின் விற்பனை அதிகரித்து வருகிறது. பேப்பர் லெஸ் பாலிசி என்ற பெயரில், அனைத்து ஆவணம், நகல், கணக்கு வரவு, செலவு, பணம் எடுப்பது, செலுத்துவது, வங்கி கணக்குகள் உள்ளிட்டவை கணினி மூலம் பதிவு செய்து பயன்படுத்த வேண்டுமென மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட்டது. இதையடுத்து அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள்,  வங்கிகள், கார்ப்பரேட் நிறுவனங்கள்,  சிறு வணிகர்கள் முதல் பெருவணிகர்கள் வரை, உணவு விடுதிகள் உள்ளிட்ட அனைவரும் கணினியில் மென்பொருளை உருவாக்கி பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால் அனைத்து வரவு செலவு கணக்குகளை கணினி மூலம் பதிவு செய்வது பயன்பாட்டுக்கு வந்து பல ஆண்டுகளானாலும் இன்றளவும் கணக்கு வரவு, செலவு நோட்டுக்களின் விற்பனை குறையவில்லை. கும்பகோணத்தில் கடந்த 60  ஆண்டுகளுக்கு மேலாக கணக்கு வரவு, செலவு மற்றும் வணிகத்துக்கு தேவையான நோட்டுகள் உள்ளிட்ட பல்வேறு கணக்குகளுக்கு தேவையான நோட்டுக்களை மட்டும் தயாரித்து  விற்பனை செய்து வருகின்றனர். தமிழக அளவில் கணக்கு வரவு, செலவு நோட்டுகளுக்கு பெயர் பெற்றதால் வெளிமாநில, மாவட்ட வணிகர்கள் தினம்தோறும் நேரில் வந்தும் வாங்கி செல்கின்றனர். மூலப்பொருட்களின் விலை 20 சதவீதம் உயர்ந்தாலும் வாடிக்கையாளர்களிடம் அதிகமான வரவேற்பு இருப்பதால் வரும் லாபத்தை குறைத்து தற்போது விற்பனை செய்து வருகின்றனர்.

இதுகுறித்து பெரியகடை தெருவில் 60 ஆண்டுகளாக கணக்கு வரவு செலவு நோட்டுகளை தயாரித்து விற்பனை செய்யும் நாகலிங்கம் கூறுகையில், நாங்கள் 4வது தலைமுறையாக கணக்கு வரவு, செலவு நோட்டுகளை தயாரித்து விற்பனை  செய்து வருகிறோம். இதில் தினசரி தவணை, பாஸ்புக் குறிப்பு, அடகு லெட்ஜர், பைனான்ஸ் லெட்ஜர், ஜவுளி கணக்கு, பில்புக் உள்ளிட்ட 40 வகையான பல்வேறு நோட்டுகளை தயாரிக்கிறோம். கர்நாடகா மாநிலத்தில் இருந்து தரமான பேப்பர்களை வாங்கி கணக்கு வரவு, செலவு நோட்டுகளை தயாரிக்கிறோம். இங்கு தயாரிக்கும் நோட்டுகள் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள் நோட்டுகளை வாங்கி செல்வதுடன் விற்பனையும் செய்து வருகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாக கணினி மூலம் கணக்கு வரவு செலவுகளை பதிவு செய்து வந்தாலும் குறிப்பிட்ட நபரின் வரவு செலவு கணக்குகளை தேடுவதற்குள் நேர விரையமாகிறது. ஆனால் நோட்டுகளில் உள்ள எண்ணை வாடிக்கையாளரிடம் கொடுத்து வரவு வைத்தால்,அந்த எண்ணை வைத்து அவர் எந்த நேரத்திலும் வரவு செலவு நோட்டுகளில் உள்ள கணக்குகளை சரிபார்க்க முடியும். கும்பகோணம் மற்றும் அனைத்து பகுதிகளில் உள்ள பெருவணிகர்கள் கணினியை பயன்படுத்தினாலும் கணக்கு வரவு, செலவு நோட்டுகளையும் பயன்படுத்துகின்றனர். கடந்தாண்டுகளில் ஒன்றரை டன் நோட்டுகள் விற்பனை  செய்யப்பட்டது. ஆனால் கடந்தாண்டு 4 டன் நோட்டுகள் விற்பனையாகியுள்ளது என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : buyers ,sale , Notes, sales, traders
× RELATED இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,120...