×

ரோகித் அதிரடியால் 2-வது டி20-ல் வெற்றி..... நியூசி.,க்கு தக்க பதிலடி கொடுத்தது இந்தியா

ஆக்லாந்து: நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி 20 போட்டியில் நியூசிலாந்து ஆணி 80 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகித்து வந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டி 20 போட்டி ஆக்லாந்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் போட்டியில் அதிரடியாக விளையாடிய நியூசிலாந்தின் துவக்க வீரர்கள் முன்ரோ-சேபெர்ட் ஜோடி இப்போட்டியில் சோபிக்க தவறியது. பின்னர் வந்த வில்லியம்சன், மிச்சேல் ஆகியோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் நியூசிலாந்து அணி 50 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் வந்த டி கிராண்ட்ஹோம் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். இதேபோல் பொறுமையாக ஆடி வந்த டெய்லர் 42 ரன்களில் ரன் அவுட்டாகி அரைசதம் அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டார். இறுதியில் நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்களை குவித்தது. இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய க்ருனால் பாண்டியா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனையடுத்து 159 ரன்கள் எடுத்ர்த்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு தவான்-ரோகித் ஜோடி அதிரடி துவக்கம் தந்தது. இருவரும் முதல் விக்கெட்டுக்கு 79 ரன்கள் சேர்த்து சேசிங்கை எளிதாக்கினர். 28 பந்துகளில் அரைசதம் கடந்த ரோகித் சர்மா ஆட்டமிழந்தார். தவானும் 30 ரன்களிலும், விஜய் சங்கர் 14 ரன்களிலும் ஆட்டமிழந்ததால் இந்திய அணி சறுக்கலை சந்தித்தது. பின்னர் வந்த அனுபவ வீரர் தோனி-பண்ட் உடன் ஜோடி சேர்ந்து ரன்குவிப்பில் ஈடுபட்டார்.

ஒருபுறம் தோனி நிதானமாக ஆட மறுபுறம் ரிஷப் பண்ட் அதிரடியில் இறங்கினார். இறுதியில் இந்திய அணி 18.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் 1-1 என இரு அணிகளும் சமநிலையில் உள்ளனர். 3-வது போட்டி வரும் ஞாயிறன்று ஹாமில்டன் நகரில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் வெல்லும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால் இப்போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.    


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : New Delhi ,Rohit ,India , New Zealand vs India, 2nd T20I
× RELATED தேர்தலையொட்டி கெத்து காட்டும்...