×

ஸ்ரீமுஷ்ணம் நகரில் தரமற்ற தார் சாலை : பெயர்ந்து கிடக்கும் ஜல்லியை அள்ளினர்

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் நகரில் தற்போது புதியதாக போடப்பட்ட தார் சாலையில் பெயர்ந்து கிடக்கும் ஜல்லிகளை கையில் ஏந்தி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சிக்கு உட்பட்ட 14வது வார்டில் உள்ள பழைய மருத்துவமனை தெரு, கசப்பை மற்றும் கொம்பாடித் தெரு பகுதியில் தார் சாலை அமைக்க தமிழ்நாடு நகர்புற சாலை திட்டப்பணியின் கீழ் ரூ.80 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் தார் சாலை பணிகள் நடந்து முடிந்துள்ளது. ஆனால் அந்த சாலை தரமற்று ஜல்லிகள் பெயர்ந்து குவியல் குவியலாக சிதறி கிடக்கிறது.  இதனால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் சிதறி கிடக்கும் ஜல்லியில் சிக்கி தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைகின்றனர். இதனால் இச்சாலைமேல் முறையாக தார் ஊற்றி ரோடுரோலர் கனரக வாகனம் மிதித்தால் தான் சாலை முழுமையாக இருக்கும் என இப்பகுதி மக்கள் தெரிவித்தும் சீரமைக்கப்படவில்லை. இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள், தரமற்ற சாலையில் பெயர்ந்து கிடக்கும் ஜல்லிகளை குவியலாக கையில் எடுத்து நேற்று காலை திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை பார்வையிட்டு நடவடிக்கை எடுத்து தரமான தார் சாலையை முறையாக அமைக்க வில்லை என்றால் வருகிற 11ம் தேதி மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் தெரிவிக்கப்படும் என்றனர். இதுகுறித்து பேரூராட்சி நிர்வாக அதிகாரி மல்லிகாவிடம் கேட்டபோது, இச்சாலை பணி முடிந்த நிலையில் கடந்த 4ம் தேதி பார்வையிட்டபோது சாலையில் ஜல்லிகள் பெயர்ந்து கிடந்தது. இதை பற்றி சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்களிடம் தெரிவித்துள்ளேன். சாலையை சீரமைக்கவில்லை என்றால் இந்த சாலை பணிக்கான தொகை பேரூராட்சி மூலம் தரப்படுவதை நிறுத்தி, மாவட்ட நிர்வாகத்திடம் தகவலை தெரிவிப்பேன் என்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Dhar Road ,Srimusham City , Srimushnam, Road, Gravel
× RELATED சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிப்பு!