×

உடன்குடி அனல்மின் நிலையத்துக்கு நிலக்கரி இறங்குதளம் எதிர்த்து கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டம்: ஆலந்தலை கடற்கரையில் பெண்கள் மனித சங்கிலி

திருச்செந்தூர்: உடன்குடி அனல்மின் நிலையத்துக்கு நிலக்கரி இறங்குதளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், ஆலந்தலையில் தூண்டில் வளைவு அமைக்க  வலியுறுத்தியும் மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர். கடற்கரையில் நடந்த மனிதசங்கிலியில் பெண்கள் பெருமளவில் கைகோர்த்தனர். தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அடுத்த ஆலந்தலை மீனவ கிராம மக்களில் பெரும்பாலானோர் மீன்பிடி தொழிலையே நம்பி உள்ளனர். 155 பைபர் படகுகள்  மூலம் சுமார் 5 ஆயிரம் மீனவர்கள் தொழில் செய்து வரும் நிலையில், உடன்குடி அனல்மின் நிலையத்துக்காக கல்லாமொழியில் நிலக்கரி இறங்குதளம்  அமைக்கவும், கடலில் பாலம் கட்டவும், கடல் வழியாக நிலக்கரி கொண்டு வரவும் மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்தன. இதனால் தங்கள் வாழ்வாதாரம்  பாதிக்கப்படும் என்று ஆலந்தலை மீனவர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

 குறிப்பாக நிலக்கரியை தரை வழியாகக் கொண்டு செல்ல வேண்டும். பாலம் கட்டுவதால் கடல் அரிப்பு ஏற்பட்டு கடல் நீர் ஊருக்குள் புகும் அபாயம் உள்ளதால்  முதலில் தூண்டில் வளைவு அமைத்து அதன்பிறகு பாலம் அமைக்க வேண்டும், இப்போது கட்டி வரும் பாலத்தில் படகுகள் மோதி சேதமாவதோடு வலைகளும்  கிழிந்து போவதாக குற்றம் சாட்டினர். இந்த ேகாரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற போராட்டத்தையும் மேற்கொள்ள முடிவு செய்தனர். இதையடுத்து எஸ்பி முரளி ராம்பா ஆலந்தலை ஊர் முக்கிய பிரமுகர்களை அழைத்துப் பேசினார். டெல்லி சென்றுள்ள கலெக்டர்  இரு நாட்களில்  ஊர்  திரும்பியதும் இதுதொடர்பாக பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்றார். இருந்தபோதும் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆலந்தலை மீனவர்கள் நேற்று படகுகளில்  கருப்புக்கொடி கட்டியதோடு,  மீன் பிடிக்கச் செல்லாமல் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மீனவர்களுக்கு ஆதரவாக கடற்கரையில் நடந்த மனித சங்கிலி  போராட்டத்தில் பெண்களும் பெருமளவில் பங்கேற்று கைகோர்த்து நின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Fishermen ,sea ,Udangudi Thermal Power Station ,beach ,Women ,Alandham , Udangudi Thermal Power Station, Coal, Sea, Fishermen Struggle, Alandham Beach, Women, Human Chain
× RELATED நெல்லை மீனவர்கள் 4-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை