×

மரத்தில் தூக்கு போட்டு கால்நடை டாக்டர் திடீர் தற்கொலை: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்

சென்னை: திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை அடுத்த மகன்காளிகாபுரம் ஊராட்சி, அம்பலேரி கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகன் சிவா (28). இவர், பாலாபுரத்தில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனையில் உதவி டாக்டராக பணியாற்றி வந்தார்.துறை உயர் அதிகாரியின்  டார்ச்சரால் கடந்த ஒரு வாரமாக சிவா கடும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி டாக்டர் சிவா, தனது தம்பி சங்கரிடம் தெரிவித்து வருத்தப்பட்டுள்ளார். அப்போது தம்பி, அவருக்கு ஆறுதல் கூறியுள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை சிவா வீட்டுக்கு வராததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், அவரை தேட ஆரம்பித்தனர். அப்போது வீட்டின் பின்புறத்தில் உள்ள முந்திரி மரத்தில் சிவா தூக்கில் சடலமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர்.தகவலறிந்து ஆர்.கே.பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுதொடர்பாக, ஆர்.கே.பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.  

இந்நிலையில் இறந்த சிவா சடலத்தை பிரேத பரிசோதனை செய்து, உறவினர்களிடம் ஒப்படைக்க முயன்றபோது, சிவா இறப்புக்கு காரமான உதவி இயக்குநர் மகேந்திரனை கைது செய்யும் வரை சடலத்தை வாங்க மாட்டோம் என கூறி சோளிங்கர் அரசு மருத்துவமனை முன்பு நேற்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, காவல் துறையினர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது, உதவி இயக்குனர் மகேந்திரனை உடனடியாக கைது செய்ய வேண்டும். சிவாவின் குடும்பத்திற்கு அரசு வேலை மற்றும் உதவி தொகை வழங்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். அதற்கு அதிகாரிகள், நீங்கள் கூறிய கோரிக்கைகள் கலெக்டர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். மகேந்திரனை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறியதால் அனைவரும் கலைந்து சென்றனர். பின்னர் சிவாவின் உடலை உறவினர்கள் வாங்கிச் சென்றனர்.

மற்றொரு சம்பவம்: பாடி தேவர் நகர் அண்ணா தெருவை சேர்ந்தவர் தினேஷ்குமார் (24). கார் டிரைவர். நேற்று முன்தினம் பெற்றோர் வேலைக்கு  சென்றுள்ளனர். தினேஷ்குமார் மட்டும் வீட்டில் இருந்துள்ளார். வேலை முடிந்து பெற்றோர் வீடு திரும்பியபோது வீட்டின் கதவு உட்புறமாக தாழிட்டு இருந்தது. பெற்றோர், கதவை பலமுறை தட்டியும் திறக்கப்படவில்லை. இதனால், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, தினேஷ்குமார் மின்விசிறியில் தூக்கில் சடலமாக தொங்குவதை பார்த்து கதறி அழுதனர். தகவலறிந்து வந்த கொரட்டூர் போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து தினேஷ்குமார் தற்ெகாலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
மிரட்டலே காரணம் தந்தை குற்றச்சாட்டு
சிவாவின் தந்தை ராமச்சந்திரன் போலீசில் அளித்த புகாரில், ‘எனது மகன் சிவா, பணிச்சுமை காரணமாகத்தான் தற்கொலை செய்துள்ளார். இதற்கு காரணமான திருத்தணி கால்நடை உதவி இயக்குநர் மகேந்திரன், மருத்துவர்கள் கூட்டத்தில் எனது மகன் சிவாவை, நீ வேலைக்கு தகுதியற்றவன் என பலமுறை அவமானப்படுத்தி உள்ளார். இரவு நேரத்திலும், விடியற்காலை நேரத்திலும் போன் செய்து மிரட்டும் தொனியில் பேசி உள்ளார். இதனால், நான்  வேலையை விட்டு நின்றுவிடப் போகிறேன் என்று சிவா கூறியுள்ளார். எனவே, எனது மகன் சாவுக்கு கால்நடை உதவி இயக்குநர் மகேந்திரன் தான் காரணம். அவரை கைது செய்ய வேண்டும், என புகாரில் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : animal doctor ,suicide , animal doctor,suddenly, committed ,hanging herself tree
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை