×

கொல்கத்தா காவல் ஆணையர் ராஜிவ் குமாரிடம் வரும் சனிக்கிழமை ஷில்லாங்கில் விசாரணை நடத்த சி.பி.ஐ திட்டம்

கொல்கத்தா: கொல்கத்தா காவல் ஆணையர் ராஜிவ் குமாரிடம் வரும் சனிக்கிழமை ஷில்லாங்கில் விசாரணை நடத்த சி.பி.ஐ  திட்டமிட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் சாரதா நிதி நிறுவன முறைகேடு தொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜிவ் குமாரிடம் விசாரணை நடத்த 40 பேர்  கொண்ட சிபிஐ அதிகாரிகள் குழு, கடந்த இரு தினங்களுக்கு முன்பு அவரது வீட்டிற்கு சென்றது. அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மாநில போலீசார்,  சிபிஐ அதிகாரிகளை சிறைபிடித்து, காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அதேசமயம் சிபிஐ நடவடிக்கையை கண்டித்தும், நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை காக்க வலியுறுத்தியும் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி  கொல்கத்தாவில் தர்ணா போராட்டத்தை தொடங்கினார். எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் மம்தாவுக்கு ஆதரவு தெரிவித்ததால் அரசியலில் பெரும் பரபரப்பு  ஏற்பட்டது. வரும் 8ம் தேதி வரை போராட்டத்தை நடத்துவதாக மம்தா கூறியிருந்த நிலையில், 47 மணி நேர நடத்தி வந்த தர்ணா போராட்டத்தை வாபஸ் பெற்றார். சிபிஐ தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘‘சாரதா சிட்பண்ட் முறைகேடு தொடர்பான விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கும்படி  கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜிவ் குமாருக்கு உத்தரவிட வேண்டும். பலமுறை சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு அவர் ஒத்துழைக்க மறுத்து வருகிறார்.  விசாரிக்க சென்றாலும் பல்வேறு தடைகளை ஏற்படுத்துகிறார்’’ என கூறப்பட்டது.

இந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா மற்றும் சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. சிபிஐ தரப்பில் ஆஜரான மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘‘சாரதா நிதி நிறுவன மோசடியை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு குழுவில்  தற்போதைய கொல்கத்தா கமிஷனர் ராஜிவ்குமார் இடம் பெற்றிருந்தார். இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க ஆரம்பித்த பிறகு, அதில் மின்னணு சார்ந்த பல்வேறு  ஆதாரங்கள் தொழில்நுட்ப ரீதியாக அழிக்கப்பட்டு இருந்தது. தொலைபேசி அழைப்புகள் குறித்த தகவல்களும் காணாமல் போய் உள்ளது. இதுதொடர்பாக விசாரிக்க  சென்ற சிபிஐ அதிகாரிகளை கொல்கத்தா போலீசார் தடுத்து நிறுத்தியது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. இந்த மோசடி வழக்கில் மட்டும் சுமார் ரூ.15,000  கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளது’’ என வாதிட்டார்.

 கமிஷனர் ராஜிவ்குமார் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, ‘‘இந்த வழக்கு தொடர்பான அனுப்பப்பட்ட அனைத்து சம்மனுக்கும் நேரில்  ஆஜராகி கமிஷனர் ராஜிவ்குமார் சிபிஐ முன்னிலையில் விளக்கமளித்துள்ளார். கடந்த ஓராண்டாக எந்த புதிய சம்மனும் அவருக்கு அனுப்பப்படவில்லை. சாரதா  நிதி நிறுவன வழக்கு என்பது நேற்று காலை வந்தது கிடையாது. வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக ராஜிவ்குமார் தரப்பில் பலமுறை சிபிஐக்கு  கடிதம் எழுதி அனுப்பப்பட்டுள்ளது’’ என வாதிட்டார். இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘இந்த வழக்கில் நேரில் ஆஜராக  ராஜிவ்குமாருக்கு என்ன பிரச்னை என்பது தெரியவில்லை. இருப்பினும் சாரதா நிதி நிறுவன முறைகேடு வழக்கு தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு சிபிஐ  தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டால் அதற்கு கமிஷனர் ராஜிவ் குமார் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அதே நேரத்தில், இந்த விவகாரத்தில் அவருக்கு  கடுமையான செயல்பாடுகளை விளைவிப்பதற்கோ அல்லது கைது செய்யவோ சிபிஐக்கு நீதிமன்றம் தடை விதிக்கிறது.

அவரிடம் கட்டாயப்படுத்தி வாக்குமூலம் பதிவு செய்யக் கூடாது. இந்த விசாரணையை மேற்கொள்ள கொல்கத்தாவில்  உகந்த சூழல் இல்லை என்பதால்,  ஷில்லாங்கில் விசாரணையை மேற்கொள்ளலாம்’’ என்றனர்.மேலும், இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு  மனுவிற்கு அம்மாநில தலைமைச் செயலாளர் மற்றும் போலீஸ் டிஜிபி விளக்கமளிக்க நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்பி வழக்கை வரும் 20ம் தேதிக்கு  ஒத்திவைத்தனர். இந்நிலையில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜிவ் குமாரிடம் வரும் சனிக்கிழமை ஷில்லாங்கில் விசாரணை நடத்த சி.பி.ஐ  திட்டமிட்டுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rajiv Kumar ,CBI ,Kolkata ,Shillong ,trial , Kolkata, Police Commissioner, Rajiv Kumar, Investigation, CBI
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...