×

என்.எல்.சி-யில் 3வது சுரங்கம் அமைக்க எதிர்ப்பு: விருதாச்சலம் அருகே திமுகவினர் உண்ணாவிரத போராட்டம்

கடலூர்: கடலூர் மாவட்டம் நெய்வேலியில் 3வது நிலக்கரி சுரங்கம் அமைக்க என்.எல்.சி நிர்வாகம் நிலத்தை கையகப்படுத்துவதை எதிர்த்து திமுகவினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விருதாச்சலம் அருகே கம்மாபுரத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர். மத்திய அரசின் பொதுத்துறையில் அதிக லாபம் ஈட்டக்கூடியது நெய்வேலி என்.எல்.சி நிறுவனம். இங்கு ஆண்டுக்கு 4000 கோடி லாபம் ஈட்டப்படுகிறது. இந்த நிலையில், 3வது சுரங்கத்தின் விரிவாக்கத்திற்காக கடலூர் மாவட்டத்தை சுற்றியுள்ள 40 கிராமங்களில் இருந்து 12,125 ஏக்கர் பரப்பளவில் விளைநிலங்களை கையகப்படுத்துவதற்கு அந்நிறுவனம் மாவட்ட நிர்வாகம் மூலம் முயற்சித்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் பல கட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.  

மேலும் ஏற்கனவே 2 சுரங்கங்கள் அமைக்க நிலங்கள் கையகப்படுத்தப்பட்ட போது, நிலம் கொடுப்பவர்களுக்கு வேலை மற்றும் மாற்று நிலம் தருவதாக தெரிவித்திருந்தது. ஆனால் என்.எல்.சி நிர்வாகம் எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை என மக்கள் குற்றம் சாட்டினர். எனவே 3வது சுரங்கம் அமைக்கும் திட்டத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விருத்தாசலம் அருகே உள்ள கம்மாபுரத்தில் தி.மு.க சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், திமுக கிழக்கு மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்  தலைமை தாங்கினார். புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் துரை.கி.சரவணன் முன்னிலையில் நடைபெறும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் 40 கிராம மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.  

இந்த போராட்டத்தில்  மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்க நினைக்கும் என்.எல்.சி நிறுவனத்தை கண்டித்தும், அதற்கு துணை நிற்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் உரையாற்றினர். இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய எம்.ஆர்.கே பன்னீர்செலவம், 3வது சுரங்கம் அமைப்பதற்கு கையகப்படுத்தப்பட உள்ள நிலங்கள் நல்ல பொருளாதாரத்தை ஈட்டக்கூடிய விளைநிலமாகும். அத்தகைய நிலத்தை விட்டுக்கொடுக்க மக்கள் தயாராக இல்லை. மேலும் மக்கள் நடத்திவரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், திமுக சார்பில் அடையாள உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து பேசிய அவர், என்எல்சியில் உற்பத்தியாகும் மின்சாரம் கர்நாடகாவுக்கு செல்கிறது,  கேரளாவுக்கு செல்கிறது. ஆனால், நம் பகுதி மக்களுக்கு வேலை கொடுப்பதில்லை.  அப்படிப்பட்ட நிறுவனம் தேவையா..? என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.  ஒப்பந்த தொழிலாளர் வேலை கூட வட மாநிலத்தவர்களுக்கு தான் கொடுக்கிறார்கள். நம்முடைய மக்களுக்கும்,  மாநிலத்திற்கும் எந்த வகையிலும் உதவாத அந்த நிறுவனத்திற்கு நம்முடைய நிலங்களை ஏன் கொடுக்க வேண்டும்?  என கேள்விகளை எழுப்பினார். நிலங்களை கையகப்படுத்துவதை நிறுத்தவில்லையென்றால் அனைத்து கட்சிகளையும், அமைப்புகளையும் ஒருங்கிணைத்து மாவட்டம் தழுவிய அளவில் மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : mine ,protesters ,NLC ,Nirvana , NLC,mining,DMK,Protest,Vrudhachalam
× RELATED சத்தீஸ்கரில் சுரங்க பள்ளத்தில்...